1“ஈரைங் குற்றமு மின்றி நேரிதி னெண்வகைப் புணர்ப்பின தென்மனார் புலவர்.’’ |
எனவும் கூறினார் ஆகலின் அவ்வகை சொல்லப்பட்டது நூல் என்ப. இனி ஆசிரியன் அகத்தியற்கு மாணாக்கர் பன்னிருவர்; சமதக்கினி இருடியின் புதல்வருள் ஒருவனும் பரசுராமன் சோதரனுமாகிய திரணதூமாக்கினி என்னும் இயற்பெயருடைய தொல்காப்பியனும், அதங்கோட்டாசானும், துராலிங்கனும், செம்பூட்சேயும், வையாபிகனும், வாய்ப்பியனும், பனம்பாரனும், கழாரம்பனும், அவிநயனும், காக்கைபாடினியும், நற்றத்தனும், வாமனனும் என. அவருள்ளே தொல்காப்பியன் அவிநயன் முதலாயினார் முத்தமிழும் விரவக் கூறிய முதல்நூலாகிய அகத்தியத்தினின்று இயற்றமிழை வேறு பிரித்து வழிநூல் செய்தார். அவ்வழிநூல் எல்லாவற்றுள்ளும் தொல்காப்பியமே சிறந்தமையின் இடைச்சங்கத்தார் அதனை அகத்தியத்தோடு ஒப்பக்கொண்டு போற்றினார். அந்நாள் முதல் இன்றுகாறும் ஏனைய நூல் பரப்பு எல்லாம் அழிய, தொல்காப்பியமே நிலை பெற்று வழங்கல் அதற்குத் தக்க சான்றாம். பெருநாரை பெருங்குருகு முதலாய நூலுடையார் இசைத் தமிழை வேறுபிரித்து வழிநூல் செய்தார். அவ்வழிநூல் எல்லாவற்றினும் சிறந்தது சிகண்டி செய்த இசைநுணுக்கம். அச்சிகண்டி நாரதன் மாணாக்கருள் சிறந்தோன், முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் முதலாய நூலுடையார் நாடகத் தமிழை வேறு பிரித்து வழிநூல் செய்தார். இசைநுணுக்கம் போலவே தொல்காப்பியத்தின் முன்னர்த் தோன்றிய வழிநூல்கள் பூதபுராணமும் மாபுராணமும் ஆம். அவை இன்ன ஆசிரியரால் செய்யப்பட்டன என அறிதல் இக்காலத்தில் கூடாதாயிற்று. ஆயினும் அவை அகத்தியம்போல விரவக் கூறாமல் வேறுபிரித்து முத்தமிழும் முற்றக் கூறிய விரிந்த வழிநூல் என்பது மாத்திரம் முன் உரைகளான் விளங்குகின்றது. தொல்காப்பியன் முதல் பன்னிருவரும் ஓரொருவர் ஓரொரு படலமாகப் பன்னிரு படலம் என்னும் வழிநூலும் ஒன்று செய்தனர். ஈண்டுக் கூறிய முதல் வழி என்னும் இருவகை நூலின் சார்பாகப் பல்காப்பியம் முதலாய சார்பு நூலும் தோன்றின. கபிலம் முதலாய எதிர்நூலும் தோன்றின. அவை எல்லாம் அழியா மரபினவே ஆதலின் பிரமாண நூல்களாயின. கடைச்சங்கத்தின்
1களவியல் 11 வது பக்கம் |