பக்கம் எண் :

124பாயிர விருத்தி

பின்னர்த் தொல்காப்பியம் ஒழிந்த நூலுள் மிகப்பல இறப்பத் தொல்காப்பியத்தின் வழித்தாகச் செய்யினும் ஆசிரியன் கருத்து உணராமல் மரபுநிலை திரியச் செய்தமையால் பிரமாணமாகாத நூலும் பல தோன்றின. அவை சின்னூல், நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், சூத்திரவிருத்தி, இலக்கணவிளக்கச் சூறாவளி, இலக்கண விளக்கம் முதலாகப் பல.

இனி அகத்தியனார் வழித் தோன்றிய ஆசிரியர் எல்லாருள்ளும் தொல்காப்பியனாரே தலைவர் என்பது எல்லா ஆசிரியர்க்கும் ஒத்த துணிவு. என்னை?

1“கூறிய குன்றினு முதனூல் கூட்டித்
 தேர்மின் றுணர்த றொல்காப் பியன்ற
 னாணையின் றமிழறிந் தோர்க்குக் கடனே.’’

எனப் பல்காப்பியனார் கூறினமையானும்,

2“வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
 தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென
 வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக
 ழானாப் பெருமை யகத்திய னென்னு
 மருந்தவ முனிவ னாக்கிய முதனூல்
 பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர்
 நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்.’’

என்பதனால் அகத்தியனார் செய்த அகத்தியத்தினை முதல்நூல் எனவும் அவர் வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழானாப் பெருமை உடையார் எனவும் அவர் செய்த முதல்நூலைப் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவராயினார் தொல்காப்பியனார் எனவும் பன்னிருபடலத்துக்குப் பாயிரம் கூறியதை அப்பன்னிருவரும் உடம்பட்டமையானும், பன்னிருபடலம் முதல் நூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும்,

“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
 தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
 றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
 துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
 பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த’’

1இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம்