பற்றி ஏறினார்; அது குற்றம் என்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனாரையும் ‘சுவர்க்கம் புகாதிர்’ எனச் சபித்தார்; ‘யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானும் சுவர்க்கம் புகாதிர்’ என அகத்தியனாரையும் சபித்தார்; அதனான் அவர் வெகுண்டார் ஆகலின், அவன் செய்த நூலைக் கேளற்க என்றார்.’’ எனப் பாயிரத்துள் உரைத்தார். அவர் இன்ன நூல் பிரமாணம் கொண்டு எழுதினார் என அறிதல் பன்னூல் இறந்து பட்டமையின் இக்காலத்து அரிதாயிற்று. நமக்கு மேற்கோள் கிட்டாமைகொண்டு அவர் உரைத்தன கொள்ளாம் எனல் அமையாது. என்னை, பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் ஆண்டு வீற்றிருந்தான் என்றாற்போலப் புனைந்துரை வகையால் கூறுவும் ஆசிரியர் கருத்தை மாறாக உணர்ந்தமையால் கூறுவவும் அன்றி, அவர் பன்னூல் பயின்ற செந்நெறிச் செல்வராகலின் தாமே ஒன்றைப் படைத்திட்டுப் பொய் கூறார் ஆகலானும், அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் நகுடற்குப்பின் தென்திசைப் போந்தபின் சுவர்க்கம்போய் மீண்டார் எனல் எந்நூலகத்தும் இன்மையானும் என்பது. இனிக் குரவனைச் சபித்தமை தொல்காப்பியனார்க்குக் கூடுமோ எனில், கீழாயினார்போல் அன்றிப் பெரியார்க்கு யாதானும் ஒரு நீதிபற்றி வெகுளி கோடல் அறமாம்; அன்றேல் அது குற்றமாம். அது பிழைத்த கந்தருவன் ஒருவனைச் சபிக்கும் ஆற்றலிருந்தும் சபியாமல் பொறுத்த குற்றத்துக்காகச் சமதக்கினியைப் பிதிரர் நகுலம் ஆமாறு சபித்தார் எனப் பாரதம் கூறுமாற்றானும் உணரப்படும். இவ்வாற்றான் கட்டளை இறந்து சென்ற குற்றத்தை ஏதுவாகக்கொண்டு அகத்தியனார் சபித்தமையும், கட்டளை இறந்ததும் குரவன் பன்னியின் பொருட்டாதலின் கூடுமெனக்கொண்டு தொல்காப்பியனார் சபித்தமையும், அவரது தவ வன்மையையும், யாவர்மட்டும் ஒப்பநிற்கும் நடுவு நிலையையும் புலப்படுத்தும் புகழ்ச் செய்தியே அன்றி இழிவாகாது. இவ்வாறே பிற்காலத்தும் கன்னியைக் காத்தற்பொருட்டுப் பரசுராமனும், நோன்பினைக் காத்தற்பொருட்டு அவன் மாணாக்கனாகிய வீடுமனும், பன்னாள் போர் புரிந்தமை பனுவலால் புகழப்பட்டன அன்றோ; இன்னும் இக் கருத்து நோக்கியன்றே தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும், “குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது’’ என்றார். |
|