பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்127

இனி நச்சினார்க்கினியர் சொற்பற்றி இச்சரிதம் ஆராய்வுழித் தொல்காப்பியனார் அகத்தியனார் மாணாக்கருள் முதன்மையுடையார் என்பது ஒன்றே அன்றி, அவ் அகத்தியனாரொடு ஒத்த தவ ஆற்றலும் உடையார் என்பதும் போதரும்.

இனி அந்நால்வகை நூலுள் மலை, பல்வகைப் பொருளையும் தனக்குள் அடக்கிப் பிண்டமாகத் தோற்றலான் இயற்கை முதல் நூலும், இன்ன இடத்து இன்ன பொருளை வைத்தல் வேண்டுமென்னும் முறை இன்றிப் பல்வகைப் பொருளையும் தோன்றிய முறையானே விரவக் காட்டலின், இன்ன இடத்து இன்ன பொருளை வைத்து முறைப்படக் காட்டல் வேண்டுமென்னும், நியமமின்றி இயற்கை முதல்நூலின் பொருளினை உணர்ந்தமுறையான் அப்பல்வகைப் பொருளையும் விரவக் கூறும் செயற்கை முதல் நூலும் இவ்வாறாமென உணர்த்துதல் உடைத்தது.

நிலன், பல்வகைப் பொருளையும் பிற இடத்தில் கண்டு தமக்கு வேண்டும் பொருள், இப்பொருள், இன்ன இடத்திருத்தல் வேண்டுமென நினைந்து பல்வகைப்பட வேறுபிரித்து முறைப்படுத்துப் பயிரிட்ட உழவர் கருத்து ஒப்ப நெல் கரும்பு வாழை தென்னை முதலாயவற்றைக் காட்டலின், முதல்நூலின் முறையின்றி விரவிக் கிடந்த பொருளை வேறுவேறு வகைப்படுத்து, முறைப்படக் கூறிய வழிநூலும் இவ்வாறாம் என உணர்த்தல் உடைத்து.

பூ, மலையினுள்ள தேன் வெளிப்படத் தோன்றினும் மலை வாழ்வார்க்கு அன்றிப் பிறர்க்குப் பயன்படல் அரிதாகிப் பரந்து கிடத்தலானும், நிலன் ஏனையவற்றை வேறுபிரித்து முறைபடுத்துக் காட்டினும் தேனை வேறுபிரித்துத் தனித்துக் காட்டாமல் கொடிமுதலாயவற்றுள் வேர்முதல் நுனிவரை இயைத்துக் காட்டலின் மிகவும் சுருங்கி மறைதலின் பயன்படாமையானும் பிறர்க்கும் பயன்படல் ஒன்றே கருதியும், மலையினும் நிலத்தினும் உள்ள அகிலும் சந்தும் வெட்டுவேரும் பிறவும் நறுமணனை வெளிக்காட்டாது மறைத்து விடலின் அது வெளித்தோன்றல் ஒன்றே கருதியும், அம்மலையினும் நிலத்தினும் உள்ள பல்வகைப் பொருளுள் ஏனைய விடுத்துத் தேனும் மணனும் என இரண்டே தொகுத்தும் விரித்தும் காட்டலின், முதல் நூல் வழிநூல் என்னும் இருவகை நூலுள் ஒருநூல் பொருளையாவது முற்றும் கூறாது மதிநுபம் நன்கு அமையார்க்கும் பயன்படுமாறு