அவ்இரு நூலும் நோக்கி, அவற்றுள் சிலவற்றைத் தொகுத்தாயினும் விரித்தாயினும் கூறும் சார்பு நூலும் இவ்வாறாம் என உணர்த்தல் உடைத்து. துலாக்கோல், கருவிகொண்டு நிறுத்து ஆராயும் முன்னர்ப் பிறன் ஒருவன் தன்மனம் சென்றவாறே மெய் என நினைந்து ஒரு பொருளின் நிறை இத்துணைத்து எனக் கூறின், தான் அதனைத் தன் நாவின் வரையாகிய கருவியான் அறிந்து அவன் கூற்று மாறு இன்றேல் சமனிலை காட்டி உடன்பட்டு, மாறாகில் சாய்ந்து உடன்படாமல் கருவியால் திரிவுகாட்டி மறுத்து மெய்யாகிய தன் துணிவு காட்டலின், முதல் நூலின் முடிந்த பொருளை ஒருவன் யாதானும் ஒரு காரணத்தால் பிறழவைத்தால் அதனைக் கருவியால் திரிவுகாட்டித் தன் கோள் நிறீஇப் பிறன்கோள் மறுக்கும் எதிர்நூலும் இவ்வாறாம் என உணர்த்துதல் உடைத்து. இவ்வாற்றான் ஆசிரியன் நூல்வகை உரைக்குமாறு பெறப்பட்டது. அக்குடம் கழற்காய் தன்னிடத்துத் தோன்றாது பிறிது இடத்துத் தோன்றிப் பின்னர்ப் பெய்யப்பட்டமையானும், பெய்த முறைமாறிக் கீழ் உள்ளது மேலும் மேல் உள்ளது கீழுமாகக் கிடத்தலானும், காரண காரிய முறையால் காட்டாமையே அன்றித், தோற்ற முறையால் காட்டாமையும் உடைத்து. அப்பனை, எஞ்ஞான்று கொடுப்பினும் கள் அன்றிப் பிற இன்மையின் பல்வகைப் பொருளை முறைப்பட வேறுபிரித்துக் காட்டாமை உடைத்து. அத்தெங்கு, அக்குடத்தினும் அப்பனையினும் சுருங்கிய பொருளை விரித்தாயினும் அவற்றுள் விரிந்த பொருளைச் சுருக்கியாயினும் காட்டாமை உடைத்து. அப்பருத்தி, அதன் உட்பொருளை இன்ன நிறையுடைத்து எனப் பிறர் கூறின் தன்னிடத்துக் கருவி இன்மையின் அதனை உடன் படலாவது மறுத்தலாவது செய்யாமை உடைத்து. இவ்வாற்றான் அல்லாதான் நூல் வகையின் பருப்பொருளும் அறிந்து உரையான் என்பது பெறப்பட்டது. இனி நூலது உறுப்பின்வகை உரைத்தல் உரைக்கற்பாற்று. |