1“அதுவே, பிண்டந் தொகைவகை குறியே செய்கை கொண்டியல் புறனடை யென்றதன் விகற்பமோ டொன்றிய குறியே யொன்று மென்ப.’’ |
எனவும் கூறுமாற்றால், சூத்திரத்தியல்பும் அதன் கருத்தும் அதன் குறியும் உணரப்படும். இனி ஓத்தும் படலம் பிண்டமுமாவன என்னை எனின்; 2“நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்.’’ |
எனவும், 3“ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரி னதுபடல மாகும்.’’ |
எனவும், 4“மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயிற் றோன்றுமொழிப் புலவரது பிண்ட மென்ப.’’ |
எனவும் கூறினார் ஆகலின், அவ்வகை சொல்லப்பட்டனவாம் என்பது. அவற்றுள் சூத்திரத்தான் இயன்ற நூல் ஆரியத்துள் மாகேச்சுர சூத்திரமும் தமிழின்கண் ஆதியில் ஆசிரியன் அகத்தியனுக்கு உரைத்த இசைநுணுக்கமும் போல்வது. ஓத்தினான் இயன்ற நூல் இறையனார் களவியல் போல்வது. படலத்தான் இயன்ற நூல் பன்னிரு படலம் போல்வது. பிண்டத்தான் இயன்ற நூல் தொல்காப்பியம் போல்வது. இனி நால்வகைத்து ஆக்காது, சிறுநூல் பெருநூல் இடைநூல் என மூவகைத்து ஆக்கி, ஆசிரியர்க்கு மாறாகச் சிலர் கூறுப. அது பொருந்தாமை பின்னர்க் காண்க. இனி அகத்தியம் அவிநயம் முதலாயின இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்றும் மூன்று பிண்டத்தை அடக்கிய நூல் எனச் சொல்லப்படலான் அவை பிண்டத்தினை அடக்கிய வேறொரு பிண்டம் என்றார் நச்சினார்க்கினியர்.
1தொல், பாயிரம், இளம்பூரணருரை மேற்கோள். 2தொல்,பொருள் 483. 3தொல், பொருள் 484. 4தொல், பொருள் 485 |