இவ்வாற்றான் அக்குடம் முதலாய நான்கும் ஒருவகைத்தாதலைக் காட்டாமல் ஏனைய இரண்டு முதலாய பல்வகையே காட்டலின், ஆசிரியன் அல்லாதான் ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தை ஆண்டும் உணரானாகி அச்சூத்திர உறுப்பைத் தன்னுள் அடக்கிப் பெயர் மாத்திரையான் வேறுபட நின்ற ஓத்தின் பெயர்களும் அவற்றைத் தன்னுள் அடக்கிநின்ற படலத்தின் பெயர்களும் பாடத்தால் கொண்ட படலப் பன்மையை வேறுவேறு நூல் எனக் கருதி, கல்லார் முன்னர்த் தான் வேண்டியவாறு கூறுவது என்பது பெறப்பட்டது. இனிக் கிடக்கைப் பயன்வகை உரைத்தல் உரைக்கற் பாற்று. அவ்வகை ஆற்றது ஒழுக்கும், தேரைப் பாய்வும், சீய நோக்கும், பருந்தின் வீழ்வும் என நான்கு. என்னை, 1“யாற்ற தொழுக்கே தேரைப் பாய்வே சீய நோக்கே பருந்தின் வீழ்வென் றாவகை நான்கே 2கிடக்கைப் பயனே.’’ |
என்றார் ஆகலின், அவற்றுள் மலை, ஆற்றதொழுக்கினால் அருவிநீரைக் காட்டலும் ஒழுக்கின்கண் நிலன் இடையிட்டுக் காட்டாமையின் தேரைப் பாய்வு இன்மையும் உடைத்து. நிலன், தன் வளனை இடன் இடையிட்டுக் காட்டுதலின் தேரைப் பாய்வு, நெல் முதலாயவற்றை முன்னாகிய மேலிடத்தும் கிழங்கு முதலாயவற்றைப் பின்னாகிய கீழிடத்தும் காட்டலன்றி, அவற்றுள் ஒருபொருளையே முன்னும் பின்னும் என இரண்டிடத்தும் காட்டாமையின் சீய நோக்கு இன்மையும் உடைத்து. பூ, காம்பாகிய கீழிடத்திலிருக்கும் தேனைத் தும்பிக்கு இதழாகிய மேலிடத்துக் காட்டலின் சீய நோக்கும் தன்னைத் தாங்கிய முதலின் அடியினாவது நுனியினாவது பிறிது இடத்தாவது காட்டாமையின் பருந்தின் வீழ்வு இன்மையும் உடைத்து. துலாக்கோல், கொள்வோன் வேண்டும் பொருள் பல் பொருட்கும் நடுவண் சேய்த்தாகக் கிடப்பினும் பருந்தின் வீழ்வு எனப் பாய்ந்து கொணர்ந்து அளித்தல் உடைத்து.
1தொல், பாயிரம் இளம்பூரணருரை மேற்கோள். 2‘கிடக்கை முறையே’ என்பதூஉம் பாடம். |