பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்133

இவ்வாற்றான் அந்நான்கு இயல்பும் உடைய சூத்திரக்கிடக்கை உரைத்தல் ஆசிரியனது உரைத்தொழில் விகற்பம் என்பது பெறப்பட்டது.

அக்குடம், தன்கண் கழல் ஒன்றற்கொன்று தொடர்தல் இன்மையின் ஆற்றது ஒழுக்கு இன்று.

அப்பனை, பாளையன் அடிக்கண் உள்ள கள்ளினை நுனிக்கண் கொணர்ந்து கொடுக்குமிடத்து இடன் இடையிட்டுக் கொடாமையின் தேரைப் பாய்வு இன்று.

அத்தெங்கு ஒரு பொருளையே முன்னும் பின்னும் காட்டாமையின் சீய நோக்கு இன்று.

அப்பருத்தி, பொருளை வெளிக்காட்டாது தன்னகத்தே மறைத்திருத்தலின் பருந்தின் வீழ்வு எனப் பாய்தலைக் காட்டல் இன்று.

இவ்வாற்றான் நந்நான்கு தன்மையும் உரையாமை அல்லாதான் இயல்பு என்பது பெறப்பட்டது.

இனிச் சூத்திரப் பயன்வகை உரைத்தல் உரைக்கற்பாற்று.

அவ்வகை, பொழிப்பும் அகலமும் நுட்பமும் எச்சமும் என நான்கு. என்னை?

1“பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
 பழிப்பில் 2சூத்திரப் பயனான் கென்ப.’’

என்றார் ஆகலின். இனிப் பொழிப்பு என்பது என்னை எனின்?

3“பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை
 நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே.’’

எனவும்,

4“பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப்
 பிண்டமாகக் கொண்டுரைப் பதுவே.’’

எனவும் கூறுமாற்றான் அறிக. இனி அகலம் என்பது என்னை எனின்?

5“தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினுந்
 துன்னிய கடாவின் புறத்தோன்று விகற்பம்
 பன்னிய வகல மென்மனார் புலவர்.’’

என்பதனான் அறிக. இனி நுட்பம் என்பது என்னை எனின்?


1,3,5தொல்,பாயிரம், இளம்பூரணருரை மேற்கோள்

2சூத்திரம் பன்ன னான்கே, என்பதூஉம் பாடம்

4நேமிநாதவுரை மேற்கோள்