பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்137

மேலுமேலும் பொருள் பெருகிக் காட்டலின், ஈவோனைப் பின்னும் ஈவோன் ஆக்கலும் என நான்கு இயல்பும் உடைய என்று உணரப்படும்.

இவ்வாற்றான் நிலன் முதலாயின அக்குற்றம் களைதலின், ஏனைய நான்கு இயல்பும் அருவி முதலாகிய, நால்வகைப் பொருளையும் பிண்டமாகக் கருதிய இடத்து அவற்றின்கண் அமைதலின், அப்பொருளையுடைய அவை நான்கும் அந்நான்கு இயல்பும் ஒருங்கு உடைத்தாகிய கல்வியுடையானுக்கு உவமமாயின என்பது.

இனி உரைப்பாட்டு,

“தீய பயனில செய்த லின்றித்
 தூய வறம்பொரு ளின்பந் தோற்றலு
 மேய வினத்தாற் றன்னியல் விடாமையு
 மாயி னினத்தைத் தன்னியல் பாக்கலு
 மேய நான்குங் கல்வியி னியல்பே.’’

என்பது.

அக்குடத்தான் அளிக்கப்படும் கழல், நன்மை பயவாமல் பயனிலவும் தீங்கு பயப்பனவுமாகித் தேன்குடத்துள் வீழினும் இனிமை உடைத்தாகாமையின் தன் இயல்பு கெடாமை உடைத்து.

அப்பனை, அளிக்கும் கள், பாலொடு கலந்தவழியும் நன்மை பயவாமல் அப்பாலையும் தன் இயல்பாக்கல் உடைத்து.

அத்தெங்கான் அளிக்கப்படும் மட்டை, காய் முதலாய நற்பொருளோடு கலவாமையும் தன்னை அளித்த தெங்கினைப் பின்னும் மட்டையினை ஈதலுடைத்தாக்கலும் உடைத்து.

அப்பருத்தியான் அளிக்கப்படும் பொருள், தன்னை அளித்தபின் அக்காய் கெடலின் அதனைப் பின்னும் ஈதல் உடைத்து ஆக்காமை உடைத்து.

இவ்வாற்றான் அல்லாதான் அளிக்கும் கல்விப் பொருளியல்பு உணரப்படும் என்பது.

இனி நான்காவதாகிய நிலத்தியல்பு உரைக்கற்பாற்று.

அந்நிலன் ஈவோன் காரணமாகவும், கொள்வோன் காரணமாகவும், இருவர்க்கும் பொதுமை காரணமாகவும் மூவகைப்படும்.