அவற்றுள் ஈவோனைப்பற்றிக் கொள்ளும் நிலன் உரைக்கற்பாற்று. அஃது ஐயம் விபரீதம் உறின் அக்காலையே கொள்வோர் ஆசானை வினாவற்பொருட்டு அவன் இருக்கை நிலைபெயராமையும், அவன் அளிக்கும் இடன் நிலைபெயராமையும், எதிர்நோக்கற் பொருட்டு அவன் முகம் அவர்க்கு மறையாமையும், அவர் முகம் அவனுக்கு மறையாமையும் என நான்கு இயல்பு உடைத்து. அவற்றுள் மலையின் இருக்கை நிலை உடைத்து. அருவி அளிக்கும் இடன் நீளச் செல்லலின் நிலை இன்று. நிலன், வளன் அளிக்கும் இடனும் தானும் நிலையுடைமையின் அக்குற்றம் இன்மையும் அக்காலை நெற்பயிர் முதலாயின மூடலின் தன் முகம் உழவர்க்கு மறைதலும் உடைத்து. பூ, தும்பிக்குத் தன்முகம் மறையாமை அளித்தலின் அக்குற்றம் இன்மையும் தும்பி தேனை இதழகத்துள் புக்கு உண்ணலின் தனக்குத் தும்பியின் முகம் மறைதலும் உடைத்து. துலாக்கோல் அளிக்கும் இடத்துத் தன் சமநிலை பார்த்த பின்னரே பொருள் கொள்வராகலின், அவர் முகம் தனக்கு மறையாமையின் அக்குற்றம் இன்று. இவ்வாற்றான் அம்முக்குற்றமும் இன்மையின் நந்நான்கு இயல்பும் ஒருங்கு உடைய நிலத்து இருந்து அளித்தல் அவன் இயல்பு என்பது பெறப்பட்டது. இனி உரைப்பாட்டு, “ஈவோ னிருக்கை யிடனு மளித்தன் மேவ லிடனு நிலையின வாகலு மவன்முகங் கொள்வோர்க் கமைவ தாகலு மவர்முக மவனுக் கமைவ தாகலு மாவகை நான்கு மேவிய தென்ப வீவோற் பற்றி யிசையு மிடனே.’’ |
என்பது. அக்குடம் சிறார் விரும்பும் இடத்திருந்து அளித்தலின் இருக்கையும் அளிக்கும் இடனும் நிலையாமை உடைத்து. |