“கொள்வோர் தம்மை வரையா வியல்பு மல்லா தாரை வரையு மியல்புங் கொள்வோ ரிணங்கிக் கூட்டி வரினு மல்லா தார்வந் தணுகா வியல்புங் கொள்வோ ரிணங்காது தள்ளின ராயினு மவருள் யாரையு மகற்றா வியல்புமென வாவகை நான்கு மேவிய தென்ப கொள்வோர்க் குறித்துக் கொள்ளு மிடனே.’’ |
என்பது. அக்குடம், கொள்ளும் சிறாருள் ஒருவன் செல்லும் இடத்து இருத்தலும், ஏனைய சிறாரையும் அல்லாதாரையும் வரைதலும் உடைத்து. அப்பனை, நல்லோர் அணுகாமையின் கொள்வோர் உடன்படினும் மேலோரை வரைதல் உடைத்து. அத்தெங்கு, கொள்வோர் உடன்பட்ட இடத்து அல்லாதாரை வரையாமை உடைத்து. அப்பருத்தி, சிறார் உடன்படா இடத்து ஏனோரை வரைதல் உடைத்து. இவ்வாற்றான் ஆசிரியன் அல்லாதான் இருக்கும் இடன் உணரப்படும். இனிப் பொதுமைபற்றிக் கொள்ளும் நிலன் உரைக்கற்பாற்று. அந்நிலன், தூய்மையும் மரச் செறிவும் நற்காற்றும் வெப்பம் இன்மையும் உடைமையும், நான்கு பக்கமும் அடைப்பு உடைமையும், உரைக்கும் பொருளை ஈவோன் உள்ளத்து அமைத்தற்கும் கேட்ட பொருளைக் கொள்வோர் சிந்தனை செய்தற்கும் வேறுவேறு இடமும் அவ்விருவரும் போதல் வருதற்கு வேறுவேறு வழியும் உடைமையும், நூல் வைத்தற்கு அதனை அடுத்து ஊன்றி விதானம் தாங்கிநிற்கும் கால் உடைமையும் என நான்கு இயல்பு உடைத்து. அவற்றுள் மலை, தூய்மை முதலாயின உடைத்து. நாற்பக்கத்தும் அடைப்பின்று. நிலன் நாற்பக்கத்தும் வரம்பு உடைத்து. தனக்கும் கொள்வோர்க்கும் வேறுவேறு இடனும் வழியும் இன்று. பூ, தும்பி இருத்தற்கு, இதழாகிய இடத்தையும் அதற்கு அளிக்கும் தேன் இருத்தற்குக் காம்பாகிய இடத்தையும் வேறுவேறு உடைமையும், தும்பி நுழைதற்கும் தேன் ஊறுதற்கும் காம்பும் முகமும் என இருபக்கத்தும் வழியும் உடைத்து. அத்தேன் இருக்கும் இடனாகிய |