காம்பை அடுத்து ஊன்றிக் கீழ் அரும்பாகிய கால் நிற்பினும், அக்கால் விதானம் தாங்கலின்று. துலாக்கோல், தான் அளிக்கும் பொருளை அடுத்து ஊன்றி விதானம் அன்ன தூக்கினைத் தாங்கி நிற்கும் கால் அன்ன தூங்கு கயிற்றை உடைமையின் அக்குற்றம் இன்று. இவ்வாற்றான் அம்முக்குற்றமும் இன்மையின், நந்நான்கு இயல்பும் ஒருங்கு உடைய நிலத்து இருந்து அளித்தல் அவன் இயல்பு என்பது பெறப்பட்டது. இனி உரைப்படடு, “தூய்மைநற் காற்றுச் சுடர்வெம்மை யின்மை மரச்செறி வின்ன வுறப்பெறு தன்மையு நான்குபக் கத்து மோங்கிய வடைப்பு மீவோன் கொள்வோ னிருவரும் போதல் வருதற்கு வேறு வழியிரண் டாத னூலுங்கொள் வோரும் வாலிதி னிருத்தற் கிடனிரண் டாதல் கடனென வுடைமையும் வெயின்மழை தடுப்ப விதானந் தாங்கி யடுத்தூன்று கால்பல தொடுத்து நிற்றலு மாவகை நான்கு மேவிய தென்ப பொதுமை குறித்துப் புகலு மிடனே.’’ |
என்பது. அக்குடம், தூய்மை முதலாயின இல்லா இடத்திருக்கும் குற்றம் உடைத்து. அப்பனை, நான்கு பக்கத்தும் அடைப்பு இல்லாத குற்றம் உடைத்து, அத்தெங்கு, கொடுக்கும்வழிப் பாளையின் அடியில் ஊறிய கள்ளினை நுனிக்கண் கொடுக்கும் பனைபோலன்றி, மட்டையை அஃது உள்ள இடத்தே ஊழ்க்கும் குற்றம் உடைத்து. அப்பருத்தி, விதானம் தாங்கி அடுத்து ஊன்றி நிற்கும் கால் இல்லாத குற்றம் உடைத்து. இவ்வாற்றான் அல்லாதான் இருக்கும் இடம் யாதானும் ஒரு குற்றம் உடைத்தாம் என்பது பெறப்பட்டது. இப்பொருட்கு மலை முதலாயின பிண்ட உவமம். கழற்குடம் முதலாயின தனி உவமம். இனி ஐந்தாவதாகிய காலத்து இயல்பு உரைக்கற்பாற்று. அக்காலம், ஆசிரியன் என்றும் உரைக்கும் இயல்பினன் ஆயினும், பிற காரணங்களால் ஈதல் நிகழாமைபற்றி வரைவு உடைத்து. |