பூ, தும்பிக்குத் தன்னைத் தலையான் வணங்கிப் புறம் தைவரலாகிய பணிசெயலினும் இசைபாடி உள்புகின் மிகக் கொடுத்தலின் அக்குற்றம் இன்மையும், அத்தும்பி பிறிதொரு பூவில் பெற்றுச் சிறகரில் பொதிந்த மகரந்தம் கொடுத்த இடத்து மிகக் கொடாமையின் அக்குற்றமும் உடைத்து. துலாக்கோல், ஐயந் தீரல் குறித்து இன்சொல் கூறி வேண்டினார்க்கு அவர் தருபொருளை நிறுத்து அளித்தலினும், விலை கொடுத்தார்க்குத் தன் பொருளை இனிது நிறுத்து அளித்தல் உடைத்து. இவ்வாற்றான் அம்முக்குற்றமும் இன்மையின் அந்நான்கு இயல்பும் ஒருங்கு உடைய கருவி பெறப்படலின் அவை அவனுக்குப் பிண்ட உவமம் ஆயின என்பது. இனி உரைப்பாட்டு, “இயற்கை யருளும் பணியின்மிகு மருளு மின்சொலின் மிகுத லியல்புறு மருளும் பொருள்பெறு வகையின் விரிவுறு மருளுமென நல்கலின் கருவி நால்வகைத் தென்ப.’’ |
என்பது. அக்குடம், பெய்த பின்னரே கொடுத்தலின் இயற்கையின் அருளின்று. அப்பனை, தன் அடிதொட்டுப் பணிந்தகாலை அளியாது மேல் ஏறிக் கருவியான் மடல் சீவிய பின்னரே அளித்தலின் பணி செயலின் அருளின்று. அத்தெங்கு, தன்பக்கல் நின்று இன்சொல் கூறினும் அலராமையின் இன்சொலின் அருளலை இன்று. அப்பருதி, தனக்கு நீர்பெய்து உபசரித்தகாலை அளியாது தன் தலை தகர்த்தபின்னரே அளித்தலின் பொருள்பெறின் அருளலை இன்று. இவ்வாற்றான் அல்லாதான் அவாவும் அச்சமும் காரணமாக அளிப்பின் அன்றி அறம் காரணமாக அளியாமை பெறப்பட்டது. இனி ஏழாவதாகிய இன்னதற்கு என்னும் கொள்வோர இயல்பு உரைக்கற் பாற்று. அது கொள்வோன் தன்மை என்பதன்கண் உரைக்கற்பாற்று எனின், ஆண்டுக் கோடல் தொழில்பற்றி மாணாக்கனுக்கு வேண்டும் இயல்பு உரைக்கப்படும் ஆகலின் ஆசிரியனது ஈதல் தொழிற்கண் வேண்டும் இயல்பு ஈண்டு உரைக்கப்படும் என்பது. |