பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்145

இனிக் கொள்வோர் யாவராயினும் ஆசிரியன் வரையாது கொடுக்கும் இயல்பினனாயினும் முயற்சி இன்மை முதலாய காரணத்தான் ஈகை பயன்படாமைபற்றிக் கொள்வோரை அவன் வரைதல் உடையன்.

அவ்வரைவு முயற்சி இன்மையான் வரைவும், காலம் இன்மையான் வரைவும், தீவினை உடைமையான் வரைவும், அறிவின்மையான் வரைவும் என நான்கு.

அவற்றுள் மலை, முயலாதார்க்கு அளியாமையின் அவ்வரைவும் காலம் தப்பி முயலினும் அளித்தலின், அவ்வரைவு இன்மையும் உடைத்து.

நிலன், காலம் தப்பி மயலின் அளியாது பருவத்தே அளித்தலின் அக்குற்றம் இன்மையும், தீயார் முயலினும் அளித்தலின் அவ்வரைவு இன்மையும் உடைத்து.

பூ, நெய்த்தோர் முதலாயவும் உண்ணும் தீவினை உடைய ஈ முதலாயவற்றுக்குத் தேன் உண்ணும் இயல்பும் இருப்பினும் அதனை அளியாமல் இசைபாடிப் புறம் தைவந்து பின்னிலை முனியாது நன்னிலை நின்ற தும்பிக்கே ஈதலின் அக்குற்றம் இன்மையும், நறுமணன் உடைமையால் தலைமிசைச் சூடற்பாற்று என அறியாத அத்தும்பிக்கு அத்தேனுடன் மகரந்தமும் அளித்தலின் அறியாமை கண்டு வரைதல் இன்மையும் உடைத்து.

துலாக்கோல், பூவேபோல அறியாதார்க்கு அளித்தலின்றி, நிறையும் விலையும் பொருளும் அறிந்து உடன்பட்டார்க்கே அளித்தலின் அறியாதாரை வரைதல் உடைத்து.

இவ்வாற்றான் அக்குற்றம் மூன்றும் இன்மையான் அந்நான்கு வரைவும் ஒருங்கு கருதுதல் ஆசிரியனது இயல்பு என்பது பெறப்பட்டது.

இனி உரைப்பாட்டு,

“முயற்சி யின்மையின் வரைவுங் கால
 மன்மையின் வரைவு மல்லசெயலின் வரைவு
 மறியாமை நாடி யப்பொருள் வரைவுமெனத்
 தள்ளா நான்குங் கொள்வோர் வரைவே.’’

என்பது.