வணிகன் என்னும் பெயர் பிறிதொரு தொழிலை மேற்கொள்ளும் இடத்துக் கெடுதலும் உடைய. ஆசிரியன் ஊதியமாகவும் விலையாகவும் பெற்ற அறமும் புகழும் இன்பமும் கல்வியும் அழிதலின்றி, மேன்மேலும் வளர்தலானும், அவன் அளித்தல் தொழிலின் நீங்கித் தவத்தினை மேற்கொண்டு செல்லினும் அப்புகழ் நிலைத்தலானும் துலாக் கோலினும் மாணப்பெரியனாவன். இவ்வாற்றான் பயன்பற்றி அவை நான்கும் ஒருங்குகூடி அவனுக்கு ஒருவகையால் பிண்ட உவமம் ஆயின என்பது. இனி உரைப்பாட்டு, “உயர்நன் மதிப்பு முவந்தடைந் தாரை யுறுதி யுறுத்தலு முயர்புகழ் நிறுத்தலு மறம்பொரு ளின்பம்வீ டடைதலு மென்னத் திறன்படு நான்கு முரன்பட வளித்தற் கெய்திய பயனெனன் மெய்பெறத் தோன்றும்’’ |
என்பது. அக்குடம், கழல் அளித்தல்பற்றி நன்கு மதிக்கப்படலின்று, அப்பனை, கள்ளால் பசி தீர்ப்பினும் அறிவு மயங்கலின் அடைந்தாரை உறுதி உறுத்தல் இன்று. அத்தெங்கு, தான் அழிந்த பின்னர்ப் பாளை ஈனாமையால் தன் வித்தினின்று பிறிதொரு தெங்கு உளதாகச் செய்து தன் பெயர் நாட்டல் இன்று. அப்பருத்தி, தனக்குள் இருக்கும் பொருளைத் தான் அளித்தற்குப் பயனாகக் கேடு அன்றிப் பிறிதொன்றும் பெறல் இன்று. இவ்வாற்றான் அல்லாதானது பயன் அறியப்படும் என்பது. இனி ஈண்டுக் கூறிய மலை முதலாயவற்றின் பொருளும் அவற்றின் தன்மையும் ஒக்குமாயினும், மடற்பனைக்கும் முடத்தெங்கிற்கும் நன்னூலார் முதலாயினார் கூறிய பொருளை மறுத்தல் கூடாது. என்னை? பெரும்பாணாற்றுப்படையுள் 1வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த மஞ்சண் முன்றில் எனவும், புறநானூற்றுள் 2நெல்விளை கழனிப் படுபுள் ளோப்புந, ரொழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு எனவும் மடலோச்சி எனவும் கூறுமாற்றான்,
1பெரும் பாணாற்றுப்படை: 354 வது அடி. 2புறநானூறு 29 வது பாட்டு |