பக்கம் எண் :

154பாயிர விருத்தி

அதுவும் பொருந்தாது. என்னை? மடற்பனை காய் உடைத்து அன்று என மேற்கூறினாம் ஆகலானும், மாணாக்கர் விரும்பியது யாதாயினும் கொடாமல் அவர் தகுதிநோக்கித் தானே தருவது நல்லாசிரியன் தன்மை ஆதலன்றி, அல்லாதான் தன்மை ஆகாமையானும் என்பது. இன்னும் அவர்,

1“அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க்
  கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை.’’

என்றார்.

அதுவும் பொருந்தாது. என்னை? பருத்திக் குண்டிகைக்கு அது பொருள் அன்று என மேற்கூறினாம் ஆகலானும், கல்விப்பொருள் அறிவின் விகற்பத்துக்கு ஏற்றவாறு அரிதாகவாயினும் எளிதாக வாயினும் கொள்ளப்படுதலும் கொடுக்கப்படுதலும் உடைமையின், அரிதில் கோடலும் கொடுத்தலும் குற்றம் ஆகாமையானும் என்பது. இன்னும் அவர்,

2“பல்வகை யுதவி வழிபடு பண்பி
  னல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே.’’

என்றார்.

அதுவும் பொருந்தாது. என்னை? முடத்தெங்கிற்கு அது பொருளன்று எனமேற்கூறினாம் ஆகலானும், அவர் கூறிய வளைந்த தெங்கும் வழிபடுவோர்க்கும் அளித்தலானும், அல்லாதார்க்கு அளித்தல் சிறுபான்மையே ஆகலானும், வளையாத தெங்கும் அத்தன்மைத்தே ஆகலின். வளைந்த தெங்கு எனக் கோடலால் பயனின்மையானும், வழிபடுவோன் கொள்ளும் இயல்பினன் ஆகாவிடின் அவற்கு அளியாமையும் அல்லதான் அவ்வியல்பு உடையன் ஆகினவற்கு அளித்தலும், நல்லாசிரியற்கும் இயல்பு ஆகலானும் என்பது.


1பொதுப்பாயிரம் 34.

2பொதுப்பாயிரம் 35