பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்157

1“முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
 கிறையென்று வைக்கப் படும்.’’

என்றார் ஆகலானும், அம்மன்னவன் கல்லானாகின் முறைசெய்து காப்பாற்றல் கூடாமையானும், அவனைக் கற்பித்தல் கற்றோர்க்கு எல்லாம் கடப்பாடு ஆகலானும், அக்கடப்பாடு தனக்கும் தன்னோடு கற்றோர்க்கும் அன்றிப் பிறர்க்கும் உரித்து ஆகலானும், ஆசான் மகற்குப் பின்னர் மன்மகனைக் கூறினார்.

இனிக் கல்விக்குச் செல்வம் ஓராற்றானும் தினைத்துணையும் நிகரன்று ஆயினும்,

2“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
 கொள்வர் பயன்றெரி வார்’’

என்றார் ஆகலின், அதனைப் பனைத்துணையாக் கோடல் பெரியார்க்கு இயல்பு ஆகலானும், பிறிதொரு கருமம் மேற் கொண்டுழியும் தன்மகன் முதலாய மூவகையாரை மறுத்தல் கூடாமையானும், பொருள் நனிகொடுப்பானைத் துரோணன் ஏகலவனை மறுத்தாங்கு யாதானும் ஒரு காரணம்பற்றி மறுத்தலும் கூடும் ஆகலானும், அம்மூவர்க்குப் பின்னர்ப் பொருள் நனி கொடுப்போனைக் கூறினார். அந்நால்வகையார்க்கும் கற்பித்தல் ஆசாற்குக் கடப்பாடு ஆகலொன்றே அன்றி, அவர் முற்றஅறிந்தாராதல் ஒருதலை அன்று ஆகலானும், வழிபடுவோன் முற்றஅறிதல் ஒருதலையாதலை உதங்கன் ஏகலவன் முதலானோர் சரிதத்தாலும் உரைகோளாளன் முற்ற அறிதல் ஒருதலையாதலை இருக்குவேதத்துள் கூறிய உத்தாலகன் மகன் சுவேதகேதுவும் அருச்சுனனும் முதலானோர் சரிதத்தாலும் உணரப்படும் ஆகலானும், அவ்இருவகை யாருள்ளும் வழிபடுவோனுக்கு உரைகோளாளன் நிகராகாமை அருச்சுன ஏகலவர் சரிதத்தால் உணரப்படும் ஆகலானும், கற்பிக்கும் கடப்பாட்டின் ஏற்றக் குறைவுபற்றித் தன் மகன் முதலாய நால்வகையாரை முதலில் கூறி, கற்பித்தல் இன்றியும் வழிபாட்டின் பயனாகக் கல்வி தானே உளதாதல் பற்றி, அவர்க்குப்பின் வழிபடுவோனைக் கூறி, சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் என்றார் ஆகலின், அவற்குப்பின்னர் உரைகோளாளனையும் முறையால் கூறினார்.


1திருக்குறள் 388

2திருக்குறள் 104