இனிச் செவ்வன் தெரிதலே மெய்ந்நோக்கிற்கும் அந்நோக்கே பல்லுரை கேட்டற்கும், அக்கேள்வியே காதலுக்கும், அக்காதலே தெய்வத்தைப்போல மதித்தற்கும், அம்மதிப்பே திரிபின்மைக்கும் காரணம் ஆகலின், அம்முறையானே அவற்றைக் கூறினார். இனி ஆசிரியன், மாணாக்கர்க்காயினும் அவையிலாயினும் உரைக்குமிடத்துக் கடியப்படுவார் அறுவகையர். என்னை? 1“மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார் படிறு பலவுரைப்பார் பல்கா னகுவார் திரிதரு நெஞ்சத்தார் தீயவை யோர்ப்பார் கடியப்பட் டாரவையின் கண்.’’ |
என்றார் ஆகலின். இனி மொழிவது உணரும் ஆற்றல் இல்வழி, மனம் சென்றவாறே சொல் நிகழ்ந்து இடர் விளைத்தலின் அவரை முன்னும், ஆற்றல் இருப்பினும் காய்வோராயின் கலாம் நிகழும் ஆகலின் அவரை அவர் பின்னும், காயார் ஆயினும் படிறு உளதேல் அவைக்கு இழிவு ஆகலின் அவரை அவர் பின்னும், படிறு இன்றாயினும் நகை அவமதிப்பைக் காட்டலின் அவரை அவர் பின்னும், நகார் ஆயினும் நிலை இல்லா நெஞ்சத்தார் முற்றும் கேளாது இடையினும் தாம் நினைத்தாங்குச் சென்று கட்டளை இறப்பர் ஆகலின் அவரை அவர் பின்னும், திரியா நெஞ்சு உடையராயினும் தீயவை எண்ணில் கேள்வியானும் பயன் எய்தார் ஆகலின் அவரை அவர் பின்னும் முறையானே கூறினார். இனி ஆசிரியனால் ஈதலைச் செய்யாது தள்ளப்படுவோர் எண்மர். என்னை? 2“மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வ னடுநோய்ப் பிணியாள னாறாச் சினத்தன் றடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர் நெடுநூலைக் கற்கலா தார்.’’ |
என்றார் ஆகலின்.
1தொல், பாயிரவுரை மேற்கோள், நச்சினார்க்கினியம். 2தொல், பாயிரவுரை மேற்கோள் இளம்பூரணம். |