பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்159

இனிக் 1குடியென்னுங் குன்றா விளக்கம் அவித்து, 2இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பித்துத் 3தன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும் மடியுடையாற்கு எத்துணைக் கற்பித்தாலும் அவன் கற்றற்கு முயலான் ஆகலானும்,

4“தொட்டனைத் தூறு மணற்கேனி மாந்தார்க்குக்
 கற்றனைத் தூறு மறிவு.’’

என்றார் ஆகலின் முயலாதாற்கு அறிவு ஊறாமையானும், மடியை முன் கூறினார். மடியிலன் ஆயினும் 5மாண்பிறந்த மானம் உளதேல் அந்தணர் முதலாயினாரை வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தேவிடுதல் கருத்தும் உடையனாய்க் கல்விப் பயனை இழத்தலின் அவனைப் பின் கூறினார். மடி மானம் என இவை இலவாயினும் பொச்சாப்பு உளதேல்,

6“பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
 தெப்பானூ லோர்க்குந் துணிவு.’’

என்றார் ஆகலின், அது புகழைக் கொல்லும் ஆகலின் அவனை அவர்க்குப் பின் கூறினார். மடி மானம் பொச்சாப்பு இலனாயினும் காமுகன் ஆயின்,

7“அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
 பெண்ணேவல் செய்வார்க ணில்.’’

என்றார் ஆகலின் அவன்மாட்டு அறம் முதலாயின அழிதலின் அவனை அவர்க்குப் பின்கூறினார். அக்காமமும் இல்லானாயினும் கள்ளல் உள்வழி,

8“அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
 பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.’’

எனவும் 9கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை எனவும் கூறினார் ஆகலின், அவன் அருளின்றி மறுமைப் பயனும், அன்பின்றித் தன் உடம்பும் இழப்பான் ஆகலான் அவனை அவர்க்குப் பின் கூறினார்.


1.குறள் 601 6.குறள் 533
2.குறள் 607 7.திருக்குறள் 909
3.குறள் 608 8.திருக்குறள் 285
4.குறள் 396 9.திருக்குறள் 290
5.குறள் 432