பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்161

அவற்றுள், கற்பிக்கப்படு தன்மையுடையான் மாணாக்கன் எனப் படுவான்; அத்தன்மை இல்லாதான் மாணாக்கன் ஆகாதான் எனப்படுவான்.

அவருள் கற்பிக்கப்படுவோன் ஆறு உவமத்தான் உணரப்படுவான். என்னை?

1“அன்னங் கிளியே நன்னீர நெய்யரி
 யானை யானே றென்றிவை போலக்
 கூறிக் கொள்ப குணமாண் டோரே.’’

என்றார் ஆகலின்.

இனிக் கற்பிக்கப்படாதேனும் ஆறு உவமத்தான் உணரப்படுவான். என்னை?

2“குரங்கெரி விலங்கா யெருமை யாடே
 தோணி யென்றாங் கிவையென மொழிப.’’

என்றார் ஆகலின்.

இனி நன்னீரம் என்பது, நல்லநீர். நன்மை என்னும் அடை, ஈண்டு உவர் நீரை இனம் சுட்டி விலக்கி இனிய நீரை உணர்த்திற்று.

இனி நெய்யரி என்பது வினைத்தொகை நிலைக்களத்துப்பிறந்த அன்மொழித்தொகை. நெய்தல் என்பது, மயிர்போல்வன பல ஐம்மைப் பொருளை இணைத்தல். அரி என்பது, ஐம் மையையும், இரேகை முதலாய பிறவற்றையும் உணர்த்தும் பல பொருள் ஒரு சொல். ஐம்மையை உணர்த்தலை 3அரிமயிர்த் திரண்முன்கை எனப் பேய்மகளும் இவ்வாசிரியன் உரிச்சொல் இயலினும் கூறுமாற்றானும் அறிக. ஈண்டு ஐம்மையுடைப் பொருளை உணர்த்தலான் அரி என்பது ஆகுபெயர். வெண்மையதாகிய அரியினை உடையது வெள்ளரி எனப்பட்டாற்போல, நெய்த அரியினை உடையது நெய்யரி எனப்பட்டது. இவ்வாறே புறத்தினும் 4கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை என்புழிக் கொடுவரி புலியை உணர்த்திற்று. நெய்யரி என்றது பன்னாடையை. ஊற்றுக்கோல் ஊன்றப்படுவதாகிய கோல் என விரிந்தாற்போலப் பன்னாடையும் பன்னியதாகிய ஆடை என


1தொல், பாயிரம் இளம்பூரணருரை மேற்கோள்

2தொல் பாயிரம் இளம்பூரணருரை மேற்கோள்

3புறம் 11

4புறம் 135