ஆயினர் என்பதூஉம், இடைச்சங்கத்துக் கவியரங்கேறிய ஐவர் பாண்டியரும் முதற்சங்கத்துள் கவியரங்கேறிய பாண்டியர்போலத் தமக்காகப் பிறர் ஒருவரைத் தெரிந்துவையாது தாமே இருந்து நடாத்தினார் என்பதூஉம் விளங்கும். “இனிக் கடைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரு, பெருங்குன்றூர்க் கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவர் உள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும் ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், பேரிசையும், சிற்றிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழாராய்ந்தது ஆயிரத் தொண்ணூற்றைம்பதிற்றி யாண்டு என்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்தது உத்தர மதுரை என்ப. அவருள் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப.’’ எனக் கடைச்சங்க வரலாறு காணப்படலின் ஒரு தலைமுறைக்குச் சிறிது ஏறக்குறைய முப்பத்தெட்டு யாண்டாகப் பாண்டியர் நாற்பத்து ஒன்பதின்மர் காலம்வரை ஆயிரத் தொண்ணூற் றைம்பதிற்றி யாண்டு அச்சங்கம் நிலைபெற்றது என்பதூஉம், தலைமுறைக்கு ஒருவராகப் பாண்டியர்க்குப் பக்கத் துணையாக இருந்து சங்கம் நடாத்தினமையால் சங்கம் இருந்தார் நாற்பத் தொன்பதின்மர் ஆயினர் என்பதூஉம், ஏனைச் சங்கத்துப் புலவரினும் மிக அருகிக் காணப்பட்டார் ஆகலின் அச்சங்கம்போல ஆண்டிற்கு ஒருவர் கவியரங்கேறித் தலைவராகாமல் சிலகாலம் ஐந்து யாண்டிற்கு ஒருவரும், பின்னர் நான்கு யாண்டிற்கு ஒருவருமாகத் தலைமை பெற்றமையால் பாடினோர் நானூற்று நாற்பத்தொன்பதின்மர் ஆயினர் என்பதூஉம் விளங்கும். இனிப் பனுவல் அவை என்பது, பாண்டியனது அரசியல் நடாத்தும் அவையினை இனம்சுட்டி விலக்கிக் கல்விக் கழகத்தை உணர்த்திற்று. |