பாண்டியன் மாகீர்த்தி வரையாது கொடுக்கும் வள்ளலாயினும் தொன்று தொட்டுவரும் மரபுஉடைமையால் தன் மரபினர் எல்லார்க்கும் உரிமையாகிய தன் நிலத்தைப் பிறர்க்கு அளித்தல் முறை அன்மை யான் அஃது ஒழிந்த ஏனைய தருதலே முறையாகலானும், முறை தப்பிய அரசரது நிலத்தை வென்றுகோடல் அரசர்க்கு நீதியாகலானும், நிலம் எனப் பொதுப்படக் கூறினும் மாற்றாரது நிலம் எனப் பொருள் உரைக்கப்பட்டது. அதனைத் தருவோன் எனவே அடையலரை வெல்லும் பேராற்றல் உடையான் என்பதூஉம், அடுத்தார் வறியராயினும் அவரைத் தன்னொப்ப நில உரிமை உடைய அரசராக்கும் பெருவள்ளல் என்பதூஉம், பெருவளமுடையான் என்பதூஉம் பெறப்பட்டன. நிலவுரிமை தருவோன் எனவே ஏனைய பொருள் முதலாயின தரல் கூறாமையே அமைந்தது. அவன் அறிவு மிக்குடையானாய்ப் பல்லாற்றானும் புகழ்பட வாழ்ந்தானாகலின், நிலந்தரு திருவின் பாண்டியன் எனவும், சய மாகீர்த்தி எனவும், மாகீர்த்தி எனவும் காரணப்பெயர் பெற்று விளங்கினமையால் போக்கறு பனுவல் நிலந்தரு திருவின் எனக் காரணம் விளக்கி இயற்பெயர் கூறாது பாண்டியன் எனக் குடிப்பெயரே கூறினார். பாண்டியனுக்கும் அவையோர்க்கும் ஆசான் உயர்ந்தோன் என்பது தோன்ற அவர்க்குக் கூறிய போக்கறு பனுவல் என்னும் அடை கூறாமல் அறங்கரை நாவின் நான்மறை முற்றிய ஆசான் என அடையினை வேறு கூறினார். அறங்கரை நாவினான் என்றமையானே ஆசானது நா அறம் அல்லன வழுக்கியும் உரையாமை பெறப்பட்டது. பாண்டியன் அவையத்துத் தலைமை வாய்ந்தமையானே. தமிழ்ப் புலமை கூறாமையே பெறப்படலின், வடமொழிப் புலமையும் மறையும் நிரம்பிய அந்தணனாம் என்பது விளங்க நான்மறை முற்றிய ஆசான் என்றார். நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவாகாரமும், சாமவேதமும் ஆம். இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் ஆகாவோ எனின், அவை அதங்கோட்டாசிரியர்க்கும் தொல்காப்பியனார்க்கும் |