பக்கம் எண் :

204பாயிர விருத்தி

பிற்காலத்தினராகிய வியாசமுனிவரால் சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினோர்க்குப் பயன்படுமாறு முன்னுள்ள மறையுள் சிலவற்றை நான்கு கூறாகச் செய்யப்பட்டமையான் ஆகா என்பது.

இனித் தசரதன் மகன் இராகவன் காலத்திற்கு மன் உளதாகிய கபாடபுரம் தோன்றுதற்கு முன்னும் தென்மதுரையைக் கடல்கொள்ளுதற்கு முன்னும் இந்நூல் செய்யப்பட்டமையானும், கபாடபுரமும் கடல்கொண்ட பின்னர் உத்தர மதுரை தோன்றிய காலத்துச் சந்தனுவின் மனைவியாகிய பரிமளகந்தியிடத்து வியாசமுனிவர் தோன்றினமையானும், அவர் பாரதத்துள் சமதக்கினி முனிவரையும் பரசுராமரையும் பற்றிக் கூறுதலால் சமதக்கினி முனிவர்க்கு மகனாரும் பரசுராமர்க்கு உடன்பிறந்தாரும் ஆகிய திரணதூமக்கினி முனிவர் என இயற்பெயரை உடைய ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் அவருடன் கற்ற அதங்கோட்டாசிரியர்க்கும் வியாசர் காலமும் அவர் பகுத்த நான்மறைக் காலமும் பிற்பட்டமை உணரப்படும்.

புலமை நிரம்பாதாரும் நூல்செய்தும் எனப் புகுவர் ஆகலானும், புலமை நிரம்பினாரும் ஊழ்வயத்தால் மயங்கலும்கூடும் ஆகலானும், புலமை நிரம்பினார் தவம் உடையராயின் ஊழ் வயத்தால் மயங்காராயினும் யாதானும் ஓர் கோட்பாடு பற்றி, இந்திரன் பொருட்டுப் பிருகற்பதி பகவான் கூறிய இன்பநூல்போல முனைவன் நூலொடு முரணுமாறு நூல் செய்தலும் கூடுமாகலானும், அவற்றை எல்லாம் மெய்ந்நூல் எனக்கொண்டு உலகம் மயங்காமைப் பொருட்டு, ஆசிரியர் அகத்தியனார் இமயநின்று தென்திசைப் போந்த பின்னர்ப் பண்டைக் காலத்தே பாண்டியரைக் கொண்டு பேரறி வினாரைத் தொகுத்துச் சங்கமிரீஇ, அவர் நன்றெனக் கூறின் அன்றி எத்துணைப் பெரியார் செய்த நூலாயினும் அது கொள்ளற்பாற்று அன்று என ஆணை செலுத்துமாறு பணித்தார் ஆகலின், அம்முறை பற்றி இந்நூலும் காட்டினமை தோன்றப் பாண்டியன் அவையத்துக் காட்டி என்றார்.

அவை என்பது நல்லிசைப் புலவரது கூட்டம் ஆகலானும், அவருள் தலைவராயினார் ஒருவர்க்குக் காட்டின் ஏனையோரும் கேட்டல் பெறப்படலானும், வேறு வேறு கூறாமல் அவையத்து ஆசாற்குக் காட்டி என்றார்.