பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்205

இந்நூல் இயல்பானே குற்றமின்மை உடைத்தாயினும் பெரியோர் கேட்டு நன்று என்னாவிடில் பயன்படாமையின் அறங்கரை நாவின் நான்மறை முற்றிய ஆசானும், அவனும் ஒருவனாய்க் கூறின் பயன்படாமையான் அவையும், அவையும் பாண்டியனை அன்றிக் கூடாமையின் பாண்டியனும், பாண்டியனும் திருவின்றி அவையைப் பேணல் அமையாமையால் திருவும், அத்திருவும் ஈகையொடு கூடாவிடில் பயனின்மையால் தருகையும், அத்தருகையும் ஆற்றல் இல்வழி மாற்றாரான் அழியும் ஆகலின் நிலந்தரும் ஆற்றலும், அவ்அனைத்தும் எய்தினும் நூலறிவு இன்றேல் பயன் படா ஆகலின் பனுவலும், பனுவலும் குற்றம் உளதாயின் கொள்ளப் படாமையால் குற்றம் இன்மையும் ஒன்றற்கு ஒன்று தொடர்பாக முடிதலின், அம்முறையே போக்கறு பனுவல் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்குக் காட்டி என்றார்.

தெரிந்து என்பது விளங்குதல். இப்பொருட்டாதலை 1வசையறத் தெரிந்து பாவமைந் தொழுகும் பண்பிற்றாகி எனவும், 2பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தோறுஞ் சேர எனவும் கூறுமாற்றான் அறிக. அது மயங்கா என்னும் எச்சத்தின் எதிர்மறை கொண்டது.

மரபு என்பது தொன்றுதொட்டு வந்த வழக்கு. எழுத்து என்றது நூலை. இப்பொருட்டாதலை எழுத்து அறியத் தீரும் இழிதகைமை எனவும், 3எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தரும் எனவும், 4எண்ணென்ப வேனை யெழுத்தென்ப எனவும் சான்றோர் கூறுமாற்றானும் அறிக. எழுதப்படுதலின் நூலும் எழுத்து என்றாயிற்று. எழுது என்னும் முதனிலை திரிந்துநின்ற எழுத்து என்னும் தொழிற்பெயர் செயப்படு பொருளை உணர்த்தலின் ஆகுபெயர். முறை என்பது ஆகுபெயரான் நூலின்கண் முறைப்படச் சொல்லிய பொருளை உணர்த்திற்று. இதனை 5நூன்முறையை நன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி எனவும், 6நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் எனவும் கூறு மாற்றான் அறிக.


1களவியலுரை மேற்கோள்.

2திருவள்ளுவமாலை

3ஒளவையார் கொன்றை வேந்தன்

4குறள் 392.

5திருவள்ளுவமாலை.

6காக்கைபாடினியம்.