என்னும் ஐயம் நிகழும் ஆகலான் அதனை ஒழித்து வடமொழி நியாயம் சில தமிழின்வரினும், அவை தமிழிற்கும் உரிய மரபாகலின் பிறன் உடம்பட்டது தான் உடம்படுதல் என்னும் உத்திவகையால் கொள்ளப்பட்டன அன்றி, பெரும்பான்மை தமிழ்மரபின் வேறுபட்ட மரபினையுடைய அந்நூலை முதல்நூலாம் எனக் கருதி அவை கொள்ளப்பட்டன அல்ல என்பது அறிவித்தற்பொருட்டும், தமிழின்கண் உள்ள முந்து நூலே இந்நூற்கு முதல்நூலாம் என்பது உணர்த்தற் பொருட்டும், ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என அதனைப் பெயர்க்கு விசேடணமாக்கியும் முந்துநூல் கண்டு என அவற்றை முதல்நூல் எனக் கோடற்குச் செயப்படு பொருளாக்கியும் கூறினார் என்பது விடை. இனி வழிகூறல் என்கருதியோ எனின், ஆக்கியோன் உயர்ந் தோனாயினும் பிறிதோர் கோட்பாடுபற்றி முனைவன் நூலொடு முரணுமாறு தானே படைத்து நூல் செய்தானோ எனவும் ஐயுறும் ஆகலின், அதனை ஒழித்தற்பொருட்டு முனைவன் நூலின் முரணாத இன்ன நூலின் வழித்தாகச் செய்தானென வழிகூறல் வேண்டும் என்பது. இனி அகத்தியம் முதலாய முதல் நூல்கள் பிறிதொரு நூலின் வழித்தாகச் செய்யப்படாமையான் அவற்றின்கண் இவ்ஐயம் உளதாகாதோ எனின், அவை தானே தலைவனாகிய முனைவனை வழிபட்டு அவன் அருள் பெற்றவன் கண்ட இயற்கை முதல் நூலின் வழித்தாகச் செய்யப்பட்டன என்ப ஆகலின், அது வழிகூறலோடு ஒத்து ஐயம் அறுக்கும் என்பது. இனி எல்லை கூறல் யாது கருதியோ எனின், இந்நூல் உயர்ந்தோனால் முந்துநூலின் வழித்தாகச் செய்யப்படினும் ஊழி விகற்பத்தால் சிற்சில ஊழியில் சில முந்துநூல் மக்கள் அறிந்து பயன் கோடலின்றிக் கிடக்கும் ஆகலின், அங்ஙனம் மக்களான் அறிதற்கு அருமைபற்றி வழங்கப்படாத நூலோ அறிந்து பயன்கோடலின் வழங்கப்படு நூலோ எனவும் ஐயுறும் ஆகலின், அதனை ஒழித்தற் பொருட்டுப் பயன்படுமாற்றான் இன்ன எல்லையுள் நடக்கும் எனல் வேண்டும் என்பது. |