பக்கம் எண் :

210பாயிர விருத்தி

இனி நூல்பெயர், எந்நூல்மருகும் முதற்கண் எழுதப்படலான் அறியக் கிடக்கும் ஆகலின் பாயிரத்துள் கூறல் என்கருதியோ எனின் அந்நூல் செய்தானால் பெயர்பெறலே அன்றிச் செய்வித்தான் முதலாய பிறகாரணத்தானும் பெயர்பெறல் கூடும் ஆகலின், அக்காரணம் முதற்கண் எழுதிய பெயரான் விளங்காமையான் அது விளங்கற் பொருட்டுப் பாயிரத்துள் கூறல்வேண்டும் என்பது.

இனிச் செய்தானால் இந்நூல் பெயர்பெற்றமையால், பாயிரத்துள் ஆக்கியோன் பெயர் கூறவே முதற்கண் எழுதிய நூல்பெயரது காரணம் விளங்குமாகலின் வேறுகூறல் மிகையாம் எனில், செய்வித்தான் பெயரும் அதுவேயாக இருத்தலும்கூடும் ஆகலின் பாயிரத்துள் நூல் பெயரும் வேறு கூறல் இன்றியமையாது என்பது. இக்கருத்துத் தொல்காப்பியன் என்னும் பெயர்தோற்றி என்னாது தன்பெயர் தோற்றி என்றமையானே இனிது விளங்கும்.

இனி வழிகூறலே அமையும்; அதன் வகையாகிய யாப்புக் கூறல் வேண்டா எனின், இன்னதன் வழித்தாகச் செய்யப்பட்டது என வழி கூறலான் முந்துநூல் பொருளே வழிநூலினும் உள்ளதென்பது பெறப்படலின், அம்முந்து நூலிருக்க இவ்வழிநூலை யாது காரணத்தால் செய்தான் எனவும், அம்முந்துநூலின் வழு உண்மைபற்றி அது களைதல்பொருட்டுச் செய்தானோ எனவும் ஐயுறும் ஆகலின் அதனை ஒழித்தற்பொருட்டு, முந்துநூலின் கூறிய பொருள்கள் உணர்தற்கு அரியவாகத் தொக்குநின்றமையானோ, விரிந்துநின்றமையானோ தொகைவிரியாக நின்றமையானோ தான் வழங்குமொழி அல்லாத பிறிதொரு மொழிக்கண் நின்றமையானோ அப் பொருளையே உணர்தற்கு எளியவாகிப் பயன்படுமாறு தொகுத்தல் முதலாய வகையினுள் இவ்வகையால் கூறினான் என யாப்பும் கூறல் வேண்டும் என்பது,

இனி வழியி னெறியே நால்வகைத் தாகும் என ஆசிரியன் கூறலான் முதல்நூலுக்கு யாப்பின்று என்பது பெறப்படலின், இந்நூலுக்கு யாப்புக் கூறல் அமையும்; களவியலாகிய முதல் நூலுக்குக் கூறல் அமையாதே எனின், ஆசிரியன் வழியின் நெறியே எனப் பிரித்தமையான் முதல்நூல் நான்குவகை யாப்பும் உடைத்தன்று எனல் பெறப்படுமன்றி அவற்றுள் ஒருவகையும் உடைத்தன்று எனல் பெறப்படாமையானும், முனைவன் முற்றுணவர்வினன் ஆகலானும்,