பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்211

முதல்நூலுக்கு மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் ஒன்றின்றி, ஏனை மூவகைத்தாகிய யாப்பும் ஏனைய நூலை நோக்குமிடத்து அமையும் என்பது.

இனி நுதலிய பொருள் நூல் கற்குமிடத்து மாணாக்கரால் தாமே அறியக்கிடத்தலின் பாயிரத்துள் கூறல் என் கருதியோ எனின் யாதானும் ஒருபொருள் வேட்டதுபெற நாடி முயல்வார்க்கு அப்பொருள் இன்ன இடத்து உள்ளது எனக் கூறின் ஆண்டுச்சென்று அப்பொருள் கொள்ப; அல்லாக்கால் தாம்வேட்ட பொருள் இருக்குமிடமாயினும் ஆங்குச் செல்ல விரும்பார்; அதுபோலவே மாணாக்கனும் நுதலிய பொருள் இது என முன்னர்க் கூறினும் அந்நூல் எப்பொருள் நுதலிற்றோ அதன்கண் வேட்டபொருள் உளதோ என ஐயுற்று விருப்பத்தொடு முயலான் ஆகலின் கூறல் வேண்டும் என்பது.

இனிக் கேட்போரைக் கூறல் என் கருதியோ எனின், முன்னோர் நூலை முற்றக் கற்றுப் புலமை நிரம்பிய முதியோராயினும் ஊழ் வயத்தால் மயங்கலும் இயற்கையாகலானும், இந்நூலகத்தும் அவ்வாற்றான் குற்றம் உளவோ எனக் கருதுமாகலானும், அதனை ஒழித்தற்கு இன்னார் கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்தார் எனல் வேண்டும் என்பது.

இனி ஒருவன் கேட்டல் அமையாதோ கேட்போர் எனப் பன்மை கூறல் என்னை எனின், அவனும் ஊழ்வயத்தால் மயங்கியாயினும் நட்பு முதலாய பிறகாரணத்தானாயினும் குற்றத்தை நன்றெனக் கூறினும் கூறுமாகலின், அறிவுடையோர் பலரிருந்து கேட்பின் ஊழ் முதலாய காரணத்தால் சிலர் மயங்கினும் ஏனையோர் மயங்காமையின் பலர் கேட்டல்வேண்டும் என்பது.

இனி ‘உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்’ எனவும், ‘இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூலவாணிகன் சாத்தன் அறியவைத்தனன்’ எனவும் கூறலால் சிலப்பதிகாரத்தினும் மணிமேகலையினும் கேட்போர் பலரின்றி ஒருவராயவாறு என்னை எனின், ஈண்டுக் கூறிய பாயிரத்தியல்பு எல்லாம் குறைவின்றி நூலுக்கே வேண்டப்படுவன ஆகலின்