அச்சிலப்பதிகாரம் முதலாய செய்யுளிடத்துச் சில குறைந்துவரினும் இழுக்கின்று என்பது. இனிச் சிலப்பதிகாரம் முதலாயின நூலாகாவோ எனின், நூற்கப்படுவன எல்லாம் நூலேயாயினும் ஏனை நூலுக்கு எல்லாம் கருவியாதல் சிறப்புப்பற்றி இலக்கண நூலையே நூல் எனவும், ஏனையவற்றைச் செய்யுள் எனவும் வழங்கலே மரபாயிற்று. என்னை? எழுதப்படுவ எல்லாம் எழுத்து எனப்படுமாயினும் பிறவற்றைக் கூறாமல் அகரம் முதலாயவற்றையும் இலக்கண நூலையும் கூறுப ஆகலானும், ஓதப்படுவ எல்லாம் ஓத்து எனப்படுமாயினும் பிறவற்றைக் கூறாது மறையையும் இயலையும் கூறுப ஆகலானும் என்பது. இனித் தவத்தான் மனந்தூய்மை பெறாதோர் எத்துணைக் கற்பினும் ஊழ்வயத்தால் மயங்கலானும், தவம் உடையார் மயங்காமையானும், தவமுடையாரே நூல் செய்தற்கு உரியாரென விதிப்பில் கேட்டுக் குற்றம் ஆராய்வாரைக் கூறல் வேண்டா எனின், அவ்வாறு விதிப்பின் அகத்தே தவ ஒழுக்கம் முற்றினமையானே ஊழ்வயப்படாது நின்று குற்றமிலவாக நூல் செய்த வள்ளுவனார் முதலாயினார்க்குப் புறத்தே தவவேடம் இன்மையான் அவர் போல்வார் செய்த நூலினும் குற்றமுள எனப்படும் ஆகலானும், அகத்தே தவவொழுக்கம் முற்றாமையான் ஊழ்வயப்பட்டுக் குற்றமுளவாக நூல் செய்த பவணந்திமுனிவர் சிவஞான முனிவர் முதலாயினார்க்குப் புறத்தே தவவேடம் உண்மையான் அவர் போல்வார் செய்த நூல் எல்லாம் குற்றமில எனப்படும் ஆகலானும், அவ்விதி பயனின்றாக முடிதலின், யாவர் செய்த நூலாயினும் அறிவுடையார் பலர்கேட்டுக் குற்றமின்மை ஆராய்தலே வேண்டப்பட்டது என்பது. இனிப் பயன்கூறல் என்கருதியோ எனின், இன்னார்கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்தமையான் இஃது உயர்வு உடைய நூலாம் என அறிந்தானாயினும் இந்நூல் கற்க இன்ன பயக்கும் என அறியானாயின் கற்றலின்கண் ஊக்கம் செல்லாமையான் அது கூறல் வேண்டும் என்பது. |