பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்213

இவ்எட்டும் இன்றியமையாது வேண்டப்படுவன ஆகலின் இவை எல்லா ஆசிரியரானும் கொள்ளப்பட்டன.

இத்துணைச் சிறப்பிலவாயினும் ஆக்கியோனும் கேட்போரும் எக்காலத்தினர்; யாண்டிருந்தனர்; யாது காரணத்தால் இந்நூல் செய்தான் என்று அறியுமாறு மாணாக்கர்க்கு விருப்பம் செல்லல் இயல்பாகலானும், நூல் செய்த காலத்தோ அல்லது பிற்காலத்தோ அரங்கேற்றப் பட்டதெனக் கடாநிகழும் ஆகலானும், ஆணை செல்லும் அரசன் அவைக்களனாயின் கேட்போர் இந்நூல் குற்றமுடைத்து எனின் அந்நூல் கொள்ளாதொழியும்; அன்றேல் அவர் கூறினும் பயனின்றே என்று முந்து நூலைத் தொகுத்தல் முதலாய யாப்பின் எய்திய காரணமன்றிப் பிறகாரணமும் உளவோ என்றும் ஐயம் தோன்றும் ஆகலானும், நூல் செய்த காலமும் அதனை அரங்கேற்றிய களனும் ஏனைய காரணமும் கூறல் இன்றியமையாது என ஒருசார் ஆசிரியர் வேண்டினார் என்பது.

இனிக் களன் கூறவே காலமும் அடங்காதோ எனின், நூல் செய்த காலத்தே அரங்கேற்றல் வேண்டும் என்பது நியமம் ஆகாமையால் பிற்காலத்தும் கூடும் ஆகலின் அவ் இருகாலமும் வேறாதலும் உண்மையான் வேறு கூறப்பட்டது என்பது.

இனி அவ்எட்டனுள் ஆக்கியோனும் முதல்நூலும் அது வழங்கும் எல்லையும் நூல்செய்யும் முன்னரே, அந்நூலுக்குக் காரணமாக நிற்றலின் முன்வைக்கப்பட்டன. அவை மூன்றும் வழிநூலாகிய காரியம் உளதாகற்கு இன்றியமையாத காரணமேயாயினும், ஆக்கியோன் அக்காரணங்களுள் சிறந்த நிமித்தகாரணன் ஆகலின் அவன்பெயர் முன்னும் முதல் நூல் முதற்காரணம் ஆகலின் வழி அப்பெயர்க்குப் பின்னும், எல்லை அம்முதல்நூல் பொருளின் வழக்குப் பயிற்சியினை உணர்த்தலின் அது வழியின் பின்னும் முறையானே வைக்கப்பட்டன.

யாப்பு நூல் பெயரும் நுதலிய பொருளும் நூலுடன் ஒற்றித்துத் தோன்றலின் அவை அவற்றின்பின் வைக்கப்பட்டன. அவற்றுள் யாப்பு நுதலிய பொருளும் அறிதற்கு நூலே இடமாக நிற்றலின் நூல் பெயர் முன்னும், நூலது வகையே ஆகலின் யாப்பு அதன்பின்னும்,