பக்கம் எண் :

214பாயிர விருத்தி

அவ்வகையால் சொல்லப்பட்ட நூலிடமாக அறியப்படுதலின் நுதலிய பொருள் அவற்றின் பின்னும் வைக்கப்பட்டன.

கேட்போரும் பயனும் நூல் செய்யப்பட்ட பின்னரே பெறப்படுதலின் அவை அவற்றின்பின் வைக்கப்பட்டன. அவற்றுள் கேட்டற்கு உரியார் கேட்டு நன்று எனக் கொள்ளின் அன்றி அந்நூலை உலகம் கொள்ளாமையின் நூல் பயனை உலகம் எய்தற்குக் கேட்போரே காரணமாகலான், அவர் பெயர் முன்னும் பயன் பின்னுமாக வைக்கப்பட்டன.

இனி நூல் செய்த காலத்தின் பின்னர்க் களனும், களத்துள் அரங்கேற்றியபின்னர்க் காரணமும் புலப்படலின், அவை அம்முறையான் வைக்கப்பட்டன.

அவற்றுள் ஆக்கியோன் பெயர் வழி எல்லை மூன்றும் இறந்த காலத்தன. நூல்பெயர் யாப்பு நுதலியபொருள் மூன்றும் நிகழ் காலத்தன. கேட்போர் பயன் இரண்டும் எதிர்காலத்தன.

இனி அவ்எட்டனுள் வழியையும், யாப்பின் வகையுள் மொழிபெயர்ப்பையும் முனைவன் கண்ட முதல்நூல் இன்றாயினாற் போல அவன் உலகத்துக் குற்றமுளவோ என்னும் ஐயமும் இன்மையின் அந்நூல் கேட்போரையும் களனையும் இன்றாம் என்பது.

இனி ஆக்கியோன் பெயரன்றிச் செய்வித்தான் பெயரும் உரைசெய்தான் பெயரும் கூறலும், தன் நூலுக்கே அன்றி அதன் முதல் நூலுக்கும் வழிகூறலும், நூலுக்கே அன்றிப் படலம் ஓத்துச் சூத்திரங்கட்கும் பெயர் கூறலும், பெயரே அன்றித் தொகை முதலாய பிறவும் கூறலும், நூலது பிண்டத்திற்கே அன்றி அதற்கு உறுப்பாகிய படலம் ஓத்துச் சூத்திரங்கட்கும் இன்னது நுதலின் எனக் கூறலும், நூல் கேட்போரைக் கூறலே அன்றி, உரை கேட்போரையும் கூறலும், பயனே அன்றிப் பயனுக்குப் பயன் கூறலும், பாயிரம் கூறினார் பெயர் கூறலும், பாயிரத்துக்கு இலக்கணம் கூறலும், அவைபோல்வன பிறவும், பாயிரத்தோடு ஒத்த இலக்கணத்த எனக் கொள்ளப்படும்.