இனி இந்நூல் செய்வித்தானும் பாண்டியன் மாகீர்த்தியாம் என அடியார்க்குநல்லார் கூறினார். இனி இந்நூலுக்கு இதன் முன்னர் உரை செய்தார் பெயரும் கூறுதும். அவர் உரையாசிரியர் எனச் சிறப்புப்பெயர் பெற்ற இளம்பூரண அடிகளும், பேராசிரியரும், நல்லிசைப்புலவருள் ஒருவராகிய கல்லாடர் பெயர்பூண்ட பிற்காலத்தாராகிய மற்றொரு கல்லாடரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் என்று ஐவர். அவருள், இளம்பூரண அடிகள் உரை எழுத்துக்கும் சொல்லுக்கும் பொருளில் சில பகுதிக்கும் இக்காலத்து உள்ளது. பேராசிரியர் உரை பொருளதிகாரத்துள் சில பகுதிக்கு உளது. கல்லாடர் உரை சொல்லினும் எச்சவியல் ஒழிந்த ஏனைய எட்டு இயற்கு உளது. ஏனைய இறந்தனபோலும். சேனாவரையர் சொல்லதிகாரம் ஒன்றற்கே உரை எழுதினார். நச்சினார்க்கினியர் உரை எழுத்து சொல் பொருள் மூன்றுக்கும் உளது. அவர் உரைகளில் பல ஆசிரியர் கருத்துக்கு மாறாவனவும், சூத்திரப் பொருளை முற்றும் உணர்த்தாதவுமாக உள்ளன. அதுநோக்கியே இலக்கணக்கொத்து நூலார் தமது நூலுள், “நூலா சிரியர் கருத்தினை நோக்கா தொருசூத் திரத்துக் கொவ்வொரா சிரிய ரொவ்வொரு மதமா யுரையுரைக் குவரே யவ்வுரை யதனு ளடுத்த வாசகங்கட் கவர்கருத் தறியா தவரவர் கருத்தினுட் கொண்ட பொருள்படப் பலகூ றுவரே.’’ |
எனக் கூறினார். அவர் உரைகளில் சிலவற்றை ஆசிரியர் கருத்துக்கு ஒத்த இடத்தும் கொள்ளாது மறுத்தும், ஒவ்வா இடத்து மாறாது உடன் பட்டும், இப்பாயிரத்துக்கும் எழுத்தெனப்படுப என்னும் முதற் சூத்திரத்திற்கும் விருத்தி உரை என ஒன்று சிவஞானமுனிவர் செய்தனர். அவர் அவ்இருசூத்திரத்துக்கே உரை எழுதினாராயினும் அவ்வுரையுள் மரபுநிலை திரியப் பல கூறினார். இங்ஙனம் உரை பல திறப்பட்டு வழங்கலின் அவற்றை ஆசிரியர் கருத்தாகக் கொண்டு பிற்காலத்தார் செய்த நிரம்பா இலக்கணத்தவாய வீரசோழியம் காரிகை நன்னூல் சின்னூல் |