பக்கம் எண் :

216பாயிர விருத்தி

இலக்கணவிளக்கம் இலக்கணக்கொத்துப் பிரயோக விவேகம் முதலாய போக்கறா நூல்களை இக்காலத்தார் கற்றுப் புலமை நிரம்பாராய் மரபுநிலை திரியத் தாமும் வேறுவேறு இலக்கணம் செய்யத் தொடங்கினார்.

இவ்வாறு செந்தமிழியற்கை கற்போர்க்குப் பயன்படாது மறைதலை நோக்கி,

1“மறுதலைக் கடாஅ மாற்ற முடைத்தாய்த்
 தன்னூ லானு முடிந்தநூ லானு
 மையமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கித்
 தெற்றென வொருபொரு ளொற்றுமை கொளீஇத்
 துணிவொடு நிற்ற லென்மனார் புலவர்.’’

என ஆசிரியர் கூறியவாறு இந்நூலிடத்துள் நுண்பொருள் எல்லாம் யாவர்க்கும் மறையாது விளங்க விரித்துக் கூறுதலைக் கருதிற்று இவ்உரை என்பது.

இனி இந்நூலுக்கு முதல் நூலாகிய அகத்தியம் முதலாயின பன்னூற்றி யாண்டின் முன்னரே இறந்தமையின் அந்நூல்கொண்டு உரைத்தலை இன்றி இவ்வுரை பிற உரை இலக்கணம் எல்லாம் பெறும் என்பது.

இனி முதல்நூலுக்கு வழிகூறுதலாவது, ஆசிரியன் அகத்தியன் முதலாயினார் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளிடத்தும் குன்று எறிந்த முருகவேளிடத்தும் கேட்டு அகத்தியம் முதலாயின செய்தார் எனல் போல்வது.

இனி ஆயும் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு நூல் செய்தான் எனவும், அந்நூலின் வழித்தாக இந்நூல் செய்யப்பட்டது எனவும், வீரசோழிய நூலார் கூறிய சொல் பற்றிப் பிற்காலத்தார் கூறுவாராயினர்; அது பொருந்தாது. என்னை? வீரசோழியத்தின் முன்னர் நூல் செய்தார் ஒருவரும் அங்ஙனம் கூறாமையானும், அவர் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் எனவே கூறலானும், அவலோகிதன் புத்தமத குரு ஆகலின், அம்மதம் இந்நூல் செய்த காலத்து இன்மையின் இதன் முதனூல் காலத்தும் இன்மை சொல்லாதே அமைதலானும், அக்காலத்தும் உளதென்பார்


1தொல், பொருள் 660