பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்39

உயர்குலத்தான் ஆகுதலானும், மேற்பால் வருணத்தானாயினும் இழுக்கின் அவ்வருணத்துள் கீழ்ப்பால் குலத்தானாதல் ஒன்றே அன்றிக் கீழ்ப்பால் வருணத்தானும் ஆகுதலின் பிறப்பினும் இழிதலானும், மேற்கூறிய பொதுஇயல்பே அன்றித் தத்தம் வருணத்துக்கு ஓதிய சிறப்பியல்பும் இன்றிமையாமையின் அவ்வியல்புள் அந்தணரியல்பு உரைக்கற்பாற்று

இனி அவ்வியல்பு என்னையோ எனின்,

1 “ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த
  லீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகு
  மறம்புரி யந்தணர் வழிமொழி யொழுக்கம்.’’

என்றார் ஆகலின் அவ் 2அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்பது.

அவற்றுள் மலை, எழுதற்கு இயலாதனவாகி நாள் இடையீடு இன்றி ஒலிக்கும் அருவி ஒலியும், நாளிடையிட்டு ஓரொரு காலத்து ஒலிக்கும் மழை ஒலியும், காற்றுள்ள காலத்து மூங்கில் முதலாய வற்றான் எழும் மருமராஞ்ச ஒலியும், எழுதற்கு இயலுமாறு ஒருவர் கூறியவழி உளதாகும் எதிரொலியும் என, நால்வகை ஒலி உடைத்து.

அவற்றுள் அருவி ஒலிபோல எழுதாக் கேள்வியை இடையீடு இன்றி ஓதலுடையார் அந்தணர்

அம்மலை, ஐந்தீயும் முத்தீயும் என இருவகைக் கடவுள் தீயும் வெளிப்படுதற்குக் காரணமாய அச்சுவத்தம் என்னும் மரனையும் அக் கடவுட்கு ஆசனமாகிய சமி முதலாய மரனையும், உலகியல் தீயுள் ஒளபாசனத் தீப்போல அவியாது விளங்கும் சோதி இருக்கத்தையும் ஊண் அடு தீப்போல அவியாது வேண்டுங்காலை எரி வெளிப்படற்கு உரிய ஏனைய மரனையும், வேள்விக்கு இன்றியமையாது வேண்டும் சோமலதை முதலாய பிறவற்றையும் உடைத்து. தீக்கடவுள் அச்சுவ உருவம்கொண்டு தன் மருங்கு ஒளித்தலான் அரச மரம் அச்சுவத்தம் எனப்பட்டது.

இனி அரணியினின்று வெளிப்படும் ஐந்தீ முத்தீ என்னும் கடவுள் தீயும் என ஏனை உலகியல் தீயும் என அவற்றுள் ஒன்றுபற்றி அந்தணர் வேட்டலின், அம்மலை அவர்க்கு உவம மாயிற்று.


1தொல்காப்பியப் பொருளதிகாரம் 160- வது பக்கம் 2-வது வரி

2தொல்காப்பியப் பொருளதிகாரம் 75-வது சூத்திரம்.