இனி அந்தணர் செல்வம்பேணும் கருத்தால் முயலாது, கல்வி பேணும்கருத்தால் முயல்வர் ஆதலின், அவரிடத்துள்ளன கொள்வோர் வேண்டு அளவில் குறையினும் குற்றம் ஆகாமையானும், 1“ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்.’’ |
எனவும், 2“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.’’ |
எனவும் கூறினார் ஆகலின், விருந்து புறத்ததாக உண்ணாமையே அவர்க்கு இயலும் அறமாக முடிதலானும் மலையும் நிலனும் துலாக்கோலும் கொள்வோர் வேண்டு அளவில் குறையாமலும் வரையாமலும் மிகக் கொடுத்தலின் அவ்வீகை அந்தணர்க்கு ஒல்லாமையின் பூவின் ஈகையே அவர்க்குப் பொருந்தும் இயல்பிற்று என்று உணரப்படும். இனி அக்குடம் ஒலியாமையானும் தீ இன்மையானும் ஓதலும் வேட்டலும் இன்றி, தன்கண் உள்ள கழற்காயினால் சிறாரை ஒலிப்பித்தலானும் தீத்தொழில் புரிவித்தலானும் ஓதுவித்தலும் வேட்பித்தலும் உடைமையின், மலையின் மறுதலைத் தன்மைத்து, இவ்வியல்பு பிற்கூறும் அரசர் இயல்பிற்கும் வணிகர் இயல்பிற்கும் கொள்ளப்படும். இனி அப்பனை, கள் விளைப்போரை ஒலித்தல் செய்வியாமையானும் கள் விளைக்குங்காலை அதுகொண்டு தீத்தொழில் புரிவியாமையானும் ஒதுவித்தலும் வேட்பித்தலும் இன்றி, அதிதிகளாகிய சான்றார்க்கு அளித்தலான் விருந்து புறந்தந்து பசிமாற்றல் உடைமையின் நிலத்தின் மறுதலைத் தன்மைத்து. இனி அத்தெங்கு பாளை ஈனாமையின் பசிமாற்றல் இன்மையானும் நீரேற்றல் உடைமையானும் பூவின்மறுதலைத் தன்மைத்து.
1திருக்குறள் 225 2திருக்குறள் 82 |