எனவும் கூறினார் ஆகலின், அம்முறையானே துலாக்கோல் தன்கண் துக்கிய பொருள் மிகின் அச்செயல் வணிகற்குக் கேடு பயத்தலின் அதனைக் குறைத்தலானும், குறையில் கொள்வோர்க்குக் கேடு பயத்தலின் பின்னும் பொருள் கோடலானும் அத்தூக்கிய பொருள் கொள்வோர்க்கு வேண்டாப் பொருளெனக் காணின் அவ்விருவர்க்கும் கேடு பயத்தலின் அதனை அற ஒழித்தலானும், துன்பம் செயலும் பொருள் கோடலும் கோறலும் என மூவகை ஒறுப்பும் உடைத்து, இதனால் தண்டம் பெறப்பட்டது. இனி அக்குடம், ஓதலும் வேட்டலும் இன்மையானும் தன் சுற்றமாகிய சிறார்க்கே கழல் அளித்தலானும் மலையின் மறுதலைத் தன்மைத்து. அப்பனை, தன் ஓலையின்கண் நூலினை எழுதிவைத்து நிலைநாட்டி, அவ்வோலையின் ஒரு தனி ஆணைக்கு உலகு புரக்கும் அலகில் அரசரும் அஞ்சிப் பணிந்து நெஞ்செனும் திறை அளிப்பச் செய்யும் கல்வி வீரராகிய உறுதிச் சுற்றத்துக்கு அவர் உண்ணற்பால ஒன்றனையும் அளியாமையின் ஈகை இன்மையும், காப்பு எல்லாவற்றுள்ளும் முதன்மையதாகிய நூல் வரைய ஏடு அளித்தலின் காத்தலும் உடைமையின் நிலத்தின் மறுதலைத் தன்மைத்து. அத்தெங்கு, ஞாயிற்றின் ஒளியின்றி நோயுற்று முடம் பட்டமையால் பிணி உடைத்து, காய் இன்மையின் செல்வமின்று, பாளை இன்மையின் விளைவு இன்று. ஏனைத் தெங்கிற்குத் தலைக் காய்ப்பின்கண் உடைபுனைந்து பொங்கலிட்டு, மணம் புணர்த்து விழா அயர்தல் உலக வழக்கு ஆதலின் அச்சிறப்பும் பிறவும் தனக்கு இன்மையின் இன்பமின்று, விளைவு இன்மையின் ஏமமின்று, இவ்வாற்றான் நாட்டிற்குரிய இலக்கணம் இன்மையானும், தன்மருங்கு எய்தினாரது உறுபகை ஊக்கம் அழியாமையின் அரண் இன்மையானும், பசியும் நீர் வேட்கையும் தணியாமையானும் குடிபுறம் காத்தோம்பல் இன்று, ஞாயிற்றின் ஒளிபடாத் துரவு நீர் முதலாயவும் அப்பெற்றியவாய மரநிழல் மேக நிழல் முதலாயவும் நோயுறுத்தும் எனப் பிடகநூல் கூறலின் அவ்வாறு தன்னை ஏனைய தெங்கினது நெருக்கத்தால் முடமுறச் செய்த கொடியார், தன்மருங்கு உறின் நோயுறுத்தலால் தண்டம் உடைத்து. |