இயல்பின் பின்னர் அத்தவத்தியல்பு, ஞானத்திற்கு யோகம் காரணம் ஆதலின் யோகத்து இயல்பின்பின் ஞானமும் முறையானே உரைக்கப்பட்டன. இனி யோகமின்றி ஞானம் ஆகாதே எனின், முன் பிறப்புக்களின் யோகம் முற்றினார்க்கு இப்பிறப்பின் அது வேண்டாமையின் அவர் ஒழிந்த ஏனோர்க்கு எல்லாம் ஆகாது என்பது, என்னை? 1“முன்னம் வந்தன ரெல்லா முடித்தனர் பின்னை வந்தவர்க் கென்ன பிரமாண முன்னுறு கோடி யுறுகதி பேசிடி லென்ன மாய மிடிகரை நிற்குமே.’’ |
என்றார் ஆகலின். இனித் தூய்மை முதலாய ஏனைய உறுப்பு உரைக்கப்படும். அவற்றுள் சில குடிமை வகையால் பெறப்பட்டனவால் எனின், ஆண்டுப் பொதுவகை பெற்றதன்றிச் சிறப்புவகை பெறாமையின் ஈண்டு அச்சிறப்பு உரைக்கப்படும் என்பது. இனித் தூய்மைவகை என்னை எனின், 2“மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு மினந்தூய்மை தூவா வரும்.’’ |
என்றார் ஆகலின், முன்னர் அகம் தூய்மை, புறம் தூய்மை எனப் பொதுவகையான் உரைத்த தூய்மை வகையுள் அகம் தூய்மை ஒன்றே இனம் தூயனாதலும் இயற்கையாகிய அறியாமையின் நீங்கி விசேட உணர்வு புலப்படுமாறு மனம் தூயன் ஆதலும், நல்வினை ஆமாறு சொல் தூயனாதலும், நல்வினை ஆமாறு செயல் தூயன் ஆதலும் என நால்வகைப்படும் என்பது. அவற்றுள் மலை தன் பிறப்பின் இயற்கையானே தனக்குக் கீழாய நிலத்துத் துகளோடு கூடாமல், 3“அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.’’ |
1. திருமந்திரம் 2. திருக்குறள் 455 3. திருக்குறள் 443 |