என்றார் ஆகலின், அவ்வாறே மேலாய நிலத்துநீரோடு கூடலின் நிலந் தூய்மை உடைத்து. இனி நிலன், கொடையால் பெரியாராய வேளாளரது பரிசயத் தானே நெற்பயிர் முதலாயவற்றை ஈயாமை என்னும் இழிகுலத் தன்மையாகிய தன் இயற்கையின் நீங்கி, அவற்றை ஈதல் வேண்டும் என்னும் விசேட உணர்வு புலப்படப் பெறுதலின் மனந்தூய்மை உடைத்து. இனிப் பூ, “அல்லவை தேய வறம்பெருகும் நல்லவை நாடி யினிய சொலின்.’’ |
என்றார் ஆகலின், அவ்வாறு நாடிச் சொல்லித் தேன் பெருக்கலால் பெருமையுடைத்தாகிய தும்பியின் பரிசயத்தால் நல்லவை நாடாமை என்னும் தன் இயற்கையின் நீங்கித், தன்னுள் இருப்பவற்றுள் நல்லவை நாடி இன்சொல்லன்ன இனிய தேனைப் புலப்படுத்தலின் சொல் தூய்மை உடைத்து. அக்கோல், 2“நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்.’’ |
என்றார் ஆகலின், அவ்வாறு கொள்ளக் கருதாராகின் நடுவுநிலைமையான் விலை கொடுத்துக் கொள்ளக் கருதிய நல்லோரது பரிசயத்தானே சமன்செய்து சீர்தூக்கும் கருத்துப் பெறுதலின் செய்வினை தூய்மை உடைத்து. இனி ஆசிரியன், 3“சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.’’ |
என்றார் ஆகலின், தன்குடிப் பிறப்பு இயற்கையால் சிற்றினம் அஞ்சியக் கீழ்களோடு கூடாமல் பெரியாரைத் துணைக்கோடலின், கீழாய நிலத்துத் துகளோடு கூடாத வான் யாறன்ன தூய்மை உடையன்.
1திருக்குறள் 96 2திருக்குறள் 171 3திருக்குறள் 451 |