அப்பனை, நல்லோர் விலக்கிய கள்ளினைக் கோடல் உடைத்து. அத்தெங்கு, பிறதெங்கின்கண் மது உண்ணச் செல்லும் தும்பிகள் இசைபாடுங்காலையும் ஓலை ஊழ்த்தலின் உலகநடையுள் அஃது இன்று. அப்பருத்தி, முன்னர்ச் சிறார்க்குச் சிற்றின்பம் செய்யினும் கல்விப்பயன் இழத்தலாகிய பெருந்துன்பினைப் பின்னர்ச் செய்தலின் உலகநடையுள் அஃது இன்று. அல்லாதான் தூய்மையிலன் ஆதலின் இடையறாது ஒழுகல் இன்மையான் நால்வகை ஒழுக்கமும் இலன். இனி ஓரொரு காலத்து ஒழுக்கமுண்மை காண்டும் எனின், 1“அச்சமே கீழ்கள தாசார மெச்ச மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.’’ |
என்றார் ஆகலின், அவ்வாறு அச்சமும் அவாவும் காரணமாக அல்லது இயல்பாக ஆசாரம் செய்யான் என்பது. இனி, 2“மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை.’’ |
என்றார் ஆகலின், நன்றாகும் ஒழுக்கத்திற்கு இனம் தூய்மையும், அது பற்றுக்கேடாக உளவாகும் ஏனைய தூய்மையும் காரணமாதலின் அம்முறையானே தூய்மையின்பின் ஒழுக்கம் கூறப்பட்டது என்பது. இனிக் கல்விவகை என்னை எனின் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாய அறநூலும், இம்மை மறுமை என்னும் இரண்டனையும் பயப்பதாய பொருள் நூலும், இம்மையே பயப்பதாய இன்ப நூலும், அம்மூவகை நூலின் சொல்லையும் பொருளையும் உள்ளவாறு அளந்துகாட்டும் கருவி நூலும் என நான்கு வகைப்படும்.
1திருக்குறள் 1075 2திருக்குறள் 456 |