அவற்றுள் இல்நிலை ஒழுக்கமும் துறவுநிலை ஒழுக்கமும் கூறுவன அறநூல். வழக்கும் தண்டமும் கூறும் நீதிநூலும், யானை குதிரை தேர் படைக்கலம் என்று இவை கூறும் நூலும், வாணிகம் சிற்பம் முழவு முதலாயின கூறும் நூலும் பொருள் நூல் எனப்படும். கைக்கிளை முதலாய ஏழு திணை கூறு நூல் இன்ப நூல் எனப்படும். காந்தருவமும் கூத்தும் வரியும் சோதிடமும் மருந்தும் அவை போல்வன பிறவும் கூறும் நூல் அம்மூன்றற்கும் பொது ஆதலின், அவற்றுள் ஒன்றாகவேனும் பலவாகவேனும் அமையும். அவற்றுள் சோதிடம் கருவியுமாம். இனி, 1“எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு.’’ |
என்றார் ஆகலின் அவை கருவிநூல் எனப்படும். அவற்றுள் மலையும் நிலனும் உண்டகாலை விடாய் தீர்த்துப் பயனுறுத்து நீரும், பசி தீர்த்துப் பின்னரும் பயனுறுத்தும் உணவுப் பொருளும், உடற்பிணி தீர்க்கும் மருந்தும் உடையவாயினும் அவற்றுள் நிலன் வேறுவேறு பொருளால் செய்தலன்றி, ஒரு பொருளானே அம்முப்பயனும் செய்யாமையானும் மலை வளம்பல படைக்கும் தன் ஒழுக்கம் காரணமாக உளவாகும் கருநெல்லி சோமலதை முதலாயவற்றுள் ஒன்றானே அம்முப்பயனும் செய்தலானும் மலையே அறநூலுக்கு உவமம் ஆயிற்று. நிலத்துள்ள தெங்கங்காய் முதலாயின விடாயும் பசியும் தீர்த்தலின், நிலன் பொருள் நூலுக்கு உவமம் ஆயிற்று. பூவினுள்ள தேன் மருந்தாம் ஆயினும் தும்பியின் பசியை முற்றும் நீக்காமல் உண்டகாலையே பயன்செயலின் இன்ப நூலுக்கு உவமம் ஆயிற்று.
1திருக்குறள் 392 |