பக்கம் எண் :

82பாயிர விருத்தி

அல்லா மகளிரையும் தன் வயமாக்கற்கு உபாயம் கூறும் அறத்தொடும் பொருளொடும்படா இன்பநூல் உடையன்.

அப்பருத்தி, சிறார்க்குக் கேடுபயத்தலே அன்றிக், கொன்றாலன்றி வெளிப்படாமையின் தனக்கும் கேடுபயக்கும் பஞ்சினை உடைத்து.

அல்லாதான், கற்பார்க்கே அன்றித் தனக்கும் உயிர்க்கு இறுதி பயக்கும் களவு நூல் முதலாயின உடையன்.

இவ்வாற்றான் அல்லாதானது கல்வி, ஒழுக்கம் பயவாமையின் கல்லாமுன் அகத்தின்கண் உள்ள இருள் நீக்காமையே அன்றிப் பின்னும் மிக்க இருள் மூடச்செய்து, துன்பம் பயக்கும் என்பது பெறப்பட்டது.

இனி,

1“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
  னற்றா டொழாஅ ரெனின்.’’

எனவும்,

2“அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
  வெஃகி வெறிய செயின்.’’

எனவும்,

3“மறப்பினு மோத்துக் கொளலாகும்’

எனவும்,

“பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’’

எனவும்,

4“கற்க கசடறக் கற்பவை கற்றபி
  னிற்க வதற்குத் தக.’’

எனவும் கூறினார் ஆகலின், பொய்தீர் ஒழுக்க நெறியின்கண் வழுவாது நிற்றற்பொருட்டுக் கற்பனவற்றைக் கசடறக் கற்பின்


1திருக்குறள் 2.

2திருக்குறள் 175.

3திருக்குறள் 134.

4திருக்குறள் 391.