அக்கல்வி பயன்படலன்றி, அந்நெறிக்கண் வழுவின் பயன் படாமையின், கல்விப் பயனுக்கு ஒழுக்கம் காரணமாதல்பற்றி, அதன்பின்னர்க் கல்வி கூறப்பட்டது என்பது. இனி வாய்மைவகை என்னை எனின்? 1“பொய்ம்மையம் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்.’’ |
எனவும், 2“வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல்.’’ |
எனவும் கூறினாராகலின், நன்மை பயக்குமாயின் நிகழ்ந்ததே அன்றி நிகழாததும் கூறலும், தீங்கு பயக்குமாயின் நிகழாததே அன்றி நிகழ்ந்ததும் கூறாமையும், நன்மை பயவாவிடினும் தீங்கு பயவாதாயின் நிகழ்ந்ததொன்றே கூறலும் அத்தன்மைத்தாயின் நிகழாதது கூறாமையும் என நான்கு வகைப்படும். அவற்றுள் மலை, நிகழ்ந்ததாகிய தன் சிகரத்தின் உயர்ச்சி காட்டலே அன்றி, மரனும் கொடியும் புதலும் புல்லும் மூடிய காரணத்தான் நிகழாததாகிய பசியநிறமும் காட்டல், யாவர்க்கும் விளங்கித் தோன்றலாகிய நன்மை பயத்தலின் வாய்மை உடைத்து. நிலன், உயர்ச்சி காட்டும் மலைபோலத் தன் ஆழத்தை வாய் பிளந்து காட்டின், அது நிகழ்ந்ததே ஆயினும் உயிர்க்குத் தீங்கு பயக்கும் ஆதலின் நிகழாததே அன்றி, நிகழ்ந்த ஆழமும் காட்டாமையான் வாய்மை உடைத்து. பூ, தும்பிக்கு நன்மை பயவாவிடினும் தீங்கு பயவாமையின் நிகழ்ந்ததாகிய நறுமணம் காட்டலின் வாய்மை உடைத்து. அக்கோல், தீங்கு பயவாவிடினும் நன்மை பயவாமையின் நிகழாததாகிய தன்மை ஒன்றும் காட்டாமையான் வாய்மை உடைத்து. ஆசிரியன், நற்புலமை உடையானாதலின் திங்களொடு ஞாயிறன்ன வாய்மை உடையன்.
1திருக்குறள் 292. 2திருக்குறள் 291. |