1“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.’’ |
என்றார் ஆகலின், கல்வியே கண்ணாகும் ஆதலானும் வாய்மை இலக்கணம் உணர்தற்குக் கல்வி காரணமாதலின் அதன்பின் வாய்மை கூறப்பட்டது என்பது. இனிக் கல்வி இல்லார் கேள்வியான் அவ்விலக்கணம் உணரல் கூடாதோ எனின், 2“இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே யொழுக்க முடையார்வாய்ச் சொல்.’’ |
எனவும், 3“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்.’’ |
எனவும் கூறினார் ஆகலின், கல்வியாகிய கண்ணில்லார்க்கு அக்கேள்வி ஊன்றுகோல்போல் உதவும் ஆதலின் அக்கேள்வி கல்வியோடு ஒக்கும் என்பது. இனி அழுக்காறு இலாமையின் வகை என்னை எனின், 4“அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான்.’’ |
எனவும். 5“கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ முண்பதூஉ மின்றிக் கெடும்.’’ |
எனவும் கூறினார் ஆகலின், பிறன் ஆக்கமாகிய செல்வமும் கல்வியும் புகழ் முதலாய கனமும் என அவற்றைப் பேணாமையும் பிறனது கொடை பேணாமையும் என அந்நான்கனது இன்மையான் நான்கு வகைப்படும் என்பது. அவற்றுள் மலை, தன் வளன் ஒன்று மறையாத வாய்மையான் அருவிநீர் முதலாயின அளித்துப் பிறன் ஆக்கம் பேணுதல் உடைத்து. பிறரது கல்வி கேட்டு எதிரொலித்தலின் கல்வி பேணுதல் இன்று.
1திருக்குறள் 393. 2திருக்குறள் 415 3திருக்குறள் 417. 4திருக்குறள் 163. 5திருக்குறள் 166. |