பக்கம் எண் :

தொகை மொழித் தொடர் வகை சூ. 16103

இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் இருமொழியிடையேயன்றி ஈற்றிலும் தொகும். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என்பன ஈற்றி்ல் தொக்கன. இவ்வுதாரணம் இரண்டும் வினைமுற்றுத் தொடர்கள். ஒட்டி ஒருசொல் போல இசைக்காமல் பிளவுபட்ட நிலையில் இசைப்பன. அதனால் ஒட்டி ஒரு சொல்போல் இசைப்பது தொகை என்னும் இலக்கணத்தோடு மாறுபடுகின்றது. அதனால் இவையிரண்டும் தொகையாகா என்பது பட்டு நீக்கப்படும்.

2) வேழக் கரும்பு என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதில் இருபெயர்ப் பண்பை விளக்கும் உருபு இல்லை. இரு பெயர் ஒட்டி நின்றன அவ்வளவே. உருபே இல்லாதபோது உருபு தொகுதல் தொகை என்னும் இலக்கணம் இங்கு எவ்வாறு பொருந்தும்? அதனால் ஒட்டி ஒருசொல்போல் நிற்றலே தொகை இலக்கணம் என்பது நன்று. உருபு தொகுதலே தொகை என்பாரும் ‘வேழக்கரும்பு’ என்பதை அதாவது உருபே இல்லாது ஒட்டிநின்ற சொற்களைத் தொகை என்று கூறுதலின் அவர்கட்கும் ஒட்டி ஒருசொல்போல் நிற்றல் தொகை இலக்கணமாம் என்ற கருத்தை உடன் படுவாராவர்.

ஒட்டி ஒருசொல் போல் நிற்பன தொகை என்னும் கருத்தினரால் செய்தான் பொருள் இருந்தான் மாடத்து என்பன தொகையாகா என நீக்கப்படுதலாலும், உருபு தொகுவன தொகை என்னும் கருத்தினரால் உருபு இல்லாமையால் தொகுதலும் இல்லாத வேழக்கரும்பு போல்வன ஒட்டி ஒருசொல் போல்வன இருபெயர் ஒட்டுப்பண்புத்தொகை எனத் தொகைப்பாற் படுத்துக் கூறப்படுதலானும் இரண்டாவது கருத்தே ஏற்கத்தக்கது.

சேனாவரையர் காலத்தவர் முதற்கருத்தை-அதாவது உருபு தொகுவதே தொகை என்பதை ஏற்று ஒருவினா எழுப்பினர். அவ்வினா:-

‘உருபு தொக வருதலும்,       ( )

‘வேற்றுமை தொக்க பெயர்வயினானும்’       (எச்ச. 22)

‘உம்மை தொக்க பெயர்வயினானும்’      ( ” )

உவமை தொக்க பெயர்வயினானும்      ( ” )

என ஆசிரியர் தொல்காப்பியர் ஓதலால் உருபு தொகுவதே தொகை என்பது அவர்கருத்தென அறியலாமே?