இதற்குவிடை : தொகுதல் என்பது உருபு தொகுதல் இல்லை; உருபின் பொருள்பட இருசொல் ஒட்டி நிற்றலேயாம். இவ்விடைக்கு நேரேசான்று காட்டாமல் வேறுசான்று காட்டி நிறுவுவர் சேனாவரையர் அது ; நம்பி மகன் என்பது நம்பியது மகன் என விரிக்கப்பட வேண்டும். ஏன்எனின் மகன் நம்பிக்கு உரிமை (கிழமை) யுடையவன். அதனால் ஆறாம் வேற்றுமையுருபாகிய அது என்பது அஃறிணை வாய்பாட்டது. நம்பியது கை என்னலாம். மகன் என்பது உயர்திணை. நம்பியது என்னும் அஃறிணை வாய்பாட்டுச் சொல் மகன் என்னும் உயர்திணைச் சொல்லைக் கொண்டு முடிவது வழு. அதனால் நான்காம் வேற்றுமைக்குரிய ‘கு’ உருபு கொடுத்து ‘நம்பிக்குமகன்’ எனவிரித்தல் வேண்டும். இதை ஆசிரியர், அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவென் உருபுகெடக் குகரம். வருமே (வேற். ம.) என்றார். இச்சூத்திரத்தில் ‘உருபு கெட’ என ஆசிரியர் கூறியது கொண்டு ‘நம்பியதுமகன்’ என அதுவுமரு விரிந்திருந்தது என்றும், பின்னர் அது கெட்டு நம்பிக்கு மகன் என குகரம் வந்தது என்றும் கொள்ளலாகாது. ஏன் எனின் முன்னர் இருந்ததாயின் நம்பியது மகன் என்பது வழுவன்று என்றாகும். வழுவாதலால்தான் குகரம் சேர்க்க வேண்டுவதாயிற்று. ஆதலின் நம்பிமகன் என்பதில் அதுவுருபு இருந்து தொக்கது என்பது தவறு. அதனால் ‘உருபு கெட’ என்பதற்கு ‘வாரா திருக்க’ என்னும் பொருளே கொள்ளல் வேண்டும். அதுபோலவே ‘உருபுதொக வருதலும்’ எனவருவன போலும் இடங்களிலும் ‘உருபு வாராதே உருபின் பொருள்பட ஒட்டி ஒரு சொல்லாய் வருதலும்’ என்னும் பொருளே கொள்ளல் வேண்டும். வேற்றுமைத் தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை ஆகியவற்றுக்கு உருபு உண்மையால் அவை தொகுவது தொகை என்னலாம்; ஆனால் வினைத்தொகை, பண்புத்தொகை, அன்மொழித்தொகை ஆகியவற்றுக்கு உருபு இன்மையால் உருபு தொகுவது தொகை என்னும் கொள்கை தவறாகும். அதனால் உருபுப் பொருள்பட ஒட்டி நிற்றலே தொகை என்பதே பொருந்தும். |