பக்கம் எண் :

106தொல்காப்பியம்-உரைவளம்

என் கருத்து

இனி உருபு தொகுவதால் தொகையாயிற்று என்றும், இரு சொல் ஒட்டி ஒரு சொல் போல நடப்பதால் தொகையாயிற்று என்றும் கூறப்படும் இரண்டு கருத்துகளுள் ஒன்றே சிறந்த காரணமாக அமையும்.

தொகை ஆறனுள் தமக்கென உருபுடையன வேற்றுமைத் தொகை பண்புத்தொகை உவமைத்தொகை உம்மைத்தொகை என்னும் நான்கே. வினைத்தொகைக்கும் அன்மொழித்தொகைக்கும் உருபு இல்லை. உருபு இல்லாத அவ்விரண்டும் தொகையென்றே கூறப்படுதலின் உருபு தொகுதல் தொகை என்னும் இலக்கணம் தவறுபடும்.

உருபு என்பது தான் சார்ந்த சொல்லின் பொருளை விளக்குவது. அவ்வுருபு வெளிப்பட்டிருக்கும் போது தான் சார்ந்த சொல் எவ்வாறிருக்குமோ அவ்வாறே தான் வெளிப்படாது மறைந்து நிற்கும் போதும் அச்சொல் முழுவடிவில் இருக்கும்.

உ-ம் :கல்லால் எறிந்தான் கல்லெறிந்தான்
 கரிதாகிய குதிரைகருங் குதிரை
 மதிபோலும் முகம்மதிமுகம்
 கபிலரும் பரணரும்கபிலபரணர்

வினைத் தொகையில் அவ்வாறு இல்லை. வளர்ந்த பிறை என்பது ‘வளர்பிறை’ என வரும் போது தனியுருபு என்பது மறையவில்லை. ஆனால் வளர்ந்த என்பதில் உள்ள பெயரெச்ச விகுதியும் இறந்த கால இடைநிலையும் மறைந்துள்ளன. வினைச் சொல்லில் வரும் இடைநிலை விகுதிகளும் உருபு எனப்படும் அதனால் உருபு என்பது அகவுருபாகவும் புறவுருபாகவும் வரும் எனக் கொள்ளலாம். வேற்றுமையுருபு முதலியன புறவுருபாகவும் இடைநிலை விகுதி முதலியன (வினைச் சொல்லின்) அகவுருபாகவும் கொள்ளல் வேண்டும். அங்ஙனம் கொள்ளின் உருபு தொகுதல் வினைத்தொகைக்கும் உண்டு என்னலாம். அதனால் தான் நச்சினார்க்கினியர் வினைத்தொகையின் ஈறுதொகுதல் என்றார்.