தொகை மொழித் தொடர் வகை சூ. 16 | 107 |
இனி அன்மொழித் தொகையிலும் ‘பொற்றொடி வந்தாள்’ என்பதில் ‘பொற்றொடியள்’ என விகுதியுருபும் (அகவுருபும்) ‘தகரஞாழல் வந்தாள்’ என்பதில் ‘தகரஞாழலள்’ என விகுதியுருபும் அல்லது தகரஞாழற்சாந்து பூசினாள் எனப் பிறசொல்லுருபும் மறைந்து காணப்படுதலின் அதுவும் தொகையெனப்படும். இவ்வாறு கொள்ளும் போது உருபு தொகுதல் தொகை என்னும் இலக்கணம் மிகப் பொருந்தும். ‘அவன் வீடு கட்டினான்’, ‘வீடு கட்டினான் வந்தான்’ என்னும் இவ்விரண்டு தொடர்களில் ‘வீடு கட்டினான்’ என்பன இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வுள்ளன. முதலில் உள்ள ‘வீடு கட்டினான்’ என்பதில் கட்டுதல் தொழிலுக்கு உரிய செயப்படு பொருள் ‘வீடு’ என்பதாக அமைந்து வீடு சிறப்புறுகிறது. பின் உள்ள ‘வீடு’ கட்டினான்’ என்பதில் வந்தவன் யார் என்பதற்கு ‘வீடு என்பதோ ‘கட்டினான்’ என்பதோ தனித்தனியாக எழுவாயாக வராமல் ஒட்டியே-அதாவது வீடு கட்டினான்’ எனச் சேர்ந்தே எழுவாயாக வந்தது. முன்னது ‘வீடு கட்டினான்’ எனப் பிரித்துக் காணப்படுவது, பின்னது ‘வீடு கட்டினான்’ என ஒட்டிக் காணப்படுவது. பிரித்துக் கண்டாலும் ஒட்டிக்கண்டாலும் ‘வீடு கட்டினான்’ என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகையேயாம். அதனால் உருபு தொகுவதே தொகை என்றும், ஒட்டி ஒரு சொல்லாய் வருவதே தொகை என்பது அத்துணைச் சிறப்பின்று என்றும் கொள்ளலாம். ஆசிரியர் ‘எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய’ என்றது தனித் தொகைகளுக்கு அன்று. அத்தொகைகள் தொடர்மொழியில் வருங்காலத்து அவற்றின் நிலை என்ன என்பதற்கு ஆகும். ‘வீடு கட்டினான் வந்தான்’ என்பதைக் கருதியது என்க. எனவே தொகை என்பது உருபு தொக வருவதே என்றும், அது தொடர் மொழியில் வருங்கால் அதாவது தன்னை மேல் வந்து முடிக்கும் சொல்லோடு தொடருங்கால் ஒட்டி ஒரு சொல்லாம் என்றும் கொள்வதே பொருந்தும். |