சிதைவாயினும் அப்பொருட்கு அதுவே சொல்லாய்ச் செந்தமிழ் நிலத்தும் கொடுந்தமிழ் நிலத்தும் வழங்கப்படுதலான் இயற்சொல்லாயிற்று. பிறவும் இவ்வாறு வருவன இயற்சொல்லாகக் கொள்க. தாம் என்பது கட்டுரைச் சுவைபட நின்றது, தெய் நிறுத்த முறையானே இயற் சொல்லாமா றுணர்த்துதல் நுதலிற்று. இ - ள்: இயற்சொல்லாவனதாம், செந்தமிழ் நாட்டு வழக்கோடு பொருந்தித் தம் பொருள் வழாமல் இசைக்குஞ் சொற்கள், எ- று. செந்தமிழ் நாடாவது, வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணம் காணாமையானும் வையையாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் 2தமிழ் திரிநிலமாதல் வேண்டுமாதலானும் அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு :- வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி. என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகம் என விசேடித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து வேங்கடமலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலம் என்றுரைப்ப.
2. தமிழ் திரிநிலம் - கொடுந் தமிழ்நிலம் அல்லது தமிழ் திரிந்த தெலுங்கு நிலம் கன்னடநிலம் மலையாளநிலம். |