பக்கம் எண் :

12தொல்காப்பியம்-உரைவளம்

அந்நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொற்களாவன :- சோறு, கூழ், மலை, மரம், உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் என்னுந் தொடக்கத்தன.

இவை அந்நிலத்துப்பட்ட எல்லா நாட்டினும் ஒத்த இயறலின் இயற்சொல்லாயின. இவற்றைச் செஞ்சொல் எனினும் அமையும்.

நச்

இது, நிறுத்த முறையானே இயற்சொற்கு இலக்கணம் கூறுகின்றது.

இ-ள் : அவற்றுள் இயற்சொல்தாமே- அந்நான்கனுள் இயற்சொல் என்று கூறிய சொல்தாம், செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி- செந்தமிழ் நிலத்தின் கண்ணே வழங்குதலோடு பொருந்தி, தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே - அச்செந்தமிழ் நிலத்தும் கொடுந்தமிழ் நிலத்தும் கேட்டோர்க்குத் தத்தம் பொருள் வழுவாமல் ஒலிக்கும் சொல்லாம், எ-று.

திரிபு இன்றி இயல்பாகிய சொல்லாவன :- நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், மக்கள், மரம், தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன.

செந்தமிழ் நிலமாவது வையை யாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்.

வெள்

இஃத இயற் சொற்கு இலக்கணம் கூறுகின்றது.

இ-ள் : அவற்றுள், இயற் சொல்லாவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்குடன் பொருந்தித் தம் பொருளின் வழுவாமல் நடக்கும் சொல்லாம், எ-று.

திரிபின்றி இயல்பாய்ப் பொருளுணர நிற்றலின் இயற்சொல் எனப்பட்டன. அவையாவன; நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன.