3எனவே, சாத்தனொடு வந்தான் என்னும் பொருட்கண் சாத்தன் வந்தான் எனவும், சாத்தற்குக் கொடுத்தான் என்னும் பொருட்கண் சாத்தன் கொடுத்தான் எனவும், உருபு தொடர்ப்பொருள் உணர்த்தும் ஆற்றல் இல்லன தொகா; அவ்வாற்றலுடையனவே தொகுவன என்றவாறாம். இரண்டாம் வேற்றுமைத் தொகை முதலாக வேற்றுமைத்தொகை அறுவகைப்படும். நிலங்கடந்தான், குழைக்காது எனவும், தாய்மூவர் பொற்குடம் எனவும்; கருப்பு வேலி, கடிசூத்திரப் பொன் எனவும்; வரைபாய்தல், கருவூர்க்கிழக்கு எனவும், சாத்தன் புத்தகம், கொற்றன் உணர்வு எனவும் மன்றப் பெண்ணை, மாரியாமா எனவும் வரும். இவை முறையானே நிலத்தைக் கடந்தான், குழையையுடைய காது; தாயொடு மூவர், பொன்னானியன்ற குடம்; கரும்பிற்கு வேலி, கடி சூத்திரத்திற்குப் பொன்; வரையினின்றும் பாய்தல், கருவூரின் கிழக்கு; சாத்தனது புத்தகம், கொற்றனது உணர்வு; மன்றத்தின் கண் நிற்கும் பெண்ணை, மாரிக்கண் உளது ஆமா என்னும் உருபு தொடர்ப்பொருளை இனிது விளக்கியவாறு கண்டு கொள்க. பிறவுமன்ன. தெய் வேற்றுமைத் தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : வேற்றுமையியல்புடையன வேற்றுமைத் தொகை, எ-று. வேற்றுமையியல என்றதனான், வேற்றுமைகட்கு ஓதிய செயப்படு பொருள் முதலாக இடம் ஈறாக வரும் பொருண்மைக் கண் தொகுஞ்சொல் வேற்றுமைத் தொகையாம் என்று கொள்க. முதல் வேற்றுமை பெயர்ப் பயனிலை கொள்வழியும் விட்டிசைத்தே நிற்றலானும் எட்டாவது விரிந்து நிற்றலானும் இவையிற்றை யொழித்து ஏனைய தொகும் என்று கொள்க. ஏகாரம் தேற்றேகாரம்.
3. சாத்தன் வந்தான் சாத்தன் கொடுத்தான் என்பன முறையே மூன்றாம் வேற்றுமைப் பொருளும் நான்காம் வேற்றுமைப் பொருளும் தாராமல் எழுவாயத் தொடராக அமைதலின் உருபு தொகும் ஆற்றல் இல்லாதன. |