வேறுபாடு உள. ‘மரக்கோடு’ என்றவழி ஒட்டுப்பட்டுப் பொருட்டொகையாகி நின்றது. ‘மரத்தின் கோடு’ என்றவழி உருபு தொகையாகி இரண்டு சொல்லாகி நின்றது. இவை சொல் நோக்கான் உணர்க. ‘வேற்றுமைத் தொகையே வேற்றமையியல் என்றதனால், அவ்வேற்றுமை மொழிமாறி நிற்குமாகலின் அத்தொகைச்சொல் மொழிமாறி நின்று ஒட்டுப்படுதலும் நின்று ஒட்டுப்படுதலும் கொள்க. மலையதிடை மலையதகம் என்பன இடைமலை, அகமலை எனவும் வரும். பிறவு மன்ன. அஃது அற்றாக, ‘உலக முவப்ப......... வாணுதல் கணவன்’ (திருமுருகு 18) என்பது பல சொல்லாகி வந்த கணவன் என்பதனோடு முடிந்து கிடத்தலான், இரண்டு சொல் ஒரு தொகையாம் என்றல் பொருந்தாதால் எனின்” எவ்வாறு வரினும் இரண்டு சொல்லாகி வந்தல்லது ஒட்டுப்படாது என்று கொள்க. அஃதாயவாறு என்னை யெனின், 3பூந்தொடை போலக் கொள்க. அஃது இரண்டாயவாறு என்னை யெனின், முற்பட இரண்டு பூவையெடுத்து ஒன்றாகக் கட்டும். அதன் பின் அவ்விரண்டும் ஒன்றாகி நின்ற தொடையோட கூடப்பின்னும் ஒரு பூவை யெடுத்துக் கட்டும். அதன்பின் அம்மூன்று பூவும் ஒன்றாகக் கட்டப்பட்ட தொடையோட பின்னும் ஒரு பூவை யெடுத்துக் கட்டும். அவ்வாறு கட்டப்பட்ட தொடைகளைப் பின்னும் இரண்டு பின்னாகச் சேர்த்தது ஒன்றாக்கும். இவ்வாறே எல்லாப்பூவும் இரண்டொன்றாக இணைத்ததாம். சொற்றொடையும் ஒட்டுப்படுங்கால் அவ்வாறு வரும் என்று கொள்க. 4‘உலக முவப்ப........................வாணுதல் கணவன்’ என்பது இரண்டு ஒன்றாக ஒட்டியவாறு என்னையெனின், உலகம்
3. பூந்தொடை - பூமாலை 4. உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓ ஒவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகு-1-6) |